கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட, ஐஏஎஸ் அதிகாரிகள் குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்கும், 12 குழுக்களை சேர்ந்த 40 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
ஸ்பெய்ன் உள்ளிட்ட வெளிநாடுகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றிய காரணத்தால் அங்கு நோயின் தாக்கம் குறைந்து, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதை அப்போது முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நமது ஊரில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் நோயின் எண்ணிக்கை கூடுகிறது என்பதை மக்களுக்கு அதிகாரிகள் எடுத்து கூற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நோயின் தாக்கம் அதிகரிப்பதால் 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு அதற்கேற்ற பணி கொடுக்கப்படுகிறது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்தும், அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கச் செய்வது குறித்தும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்களுடன், காணொலிக் காட்சி மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். மே 3ஆம் திகதிக்கு பிறகு ஊரடங்கு தொடருமா, விலக்கிக் கொள்ளப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சரின் தொடர் ஆலோசனைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, கடந்த 10 நாட்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள மாவட்டங்கள் மற்றும் பாதிப்பை தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.
ஊரடங்கு உத்தரவு மே 3 இற்கு பின்னர் நீட்டிக்கப்படும் பட்சத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது