தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) காணொளி தொடர்பாடல் மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் அவர்களுடன் கலந்தாலோசித்தார்.
இதன்போது பிரதமர் மோடி தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் பரவல் அனைவருக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது. நாம் சுய சார்புடையவர்களாக மாற வேண்டும் என்று கற்பித்திருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவல் நாம் அனைவரும் வேலைசெய்யும் முறையையே மாற்றிவிட்டது. நாம் எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்பதை கொரோனா பரவல் சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதற்கு, சமூக விலகல் என்பதை எளிமையாக வரையறுக்க, ‘2 அடி விலகியிரு’ என்ற மந்திரத்தை கிராமங்கள் நமக்கு வழங்கியுள்ளன. தனிநபர் இடைவெளி மூலம் இந்தியா கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துகிறது என்பதை உலகமே உற்று நோக்குகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.