மத்திய அரசு கடந்த மாதம் 24ஆம் திகதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்த நிலையில் வரும் 14ஆம் திகதியுடன் இந்த உத்தரவு முடிவடைகின்றது. இந்த உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அமுல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இந்த நெருக்கடியான சூழ்நிலையில், ஊரடங்கை நீடிக்க வேண்டும் என பல மாநில முதல்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒடிசாவில் வரும் 30ஆம் திகதி வரை முழு அடைப்பு இருக்கும் என மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார். இதுபோலவே பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கும் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே விவாதித்தார். காங்கிரஸ் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களும் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கை 14ஆம் திகதிக்குப் பிறகும் நீடிக்கலாமா என்பதுகுறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின்போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர். டெல்லி, பஞ்சாப், மத்திய பிரதேசம் உட்பட பல மாநிலங்களின் முதல்வர்களும் ஊரடங்கை நீடிக்க வேண்டும் எனவும், நாடு தழுவிய ஊரடங்கு மூலம் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுமட்டுமின்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.