கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் உலக அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கலக்கம் மற்றும் பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள ஆய்வொன்றின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் ‘கொவிட் -19″ கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ள நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இலங்கை மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் மிகச் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் நாடுகளாக அவர்கள் கூறியுள்ளனர்.
சீனாவை பொறுத்த வரையில் கொவிட் -19 பாதிக்கப்பட்ட முதல் தொற்றுநோயாளி இனங்காணப்பட்ட பின்னரே அவர்கள் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். எனினும் சீனா இப்போது வரையில் 81 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றுநோயாளர்களை அடையாளம் கண்டுள்ளதுடன் மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
எனினும் ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவின் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் உயரிய மட்டத்தில் உள்ளது என கூறும் அந்த ஆய்வு, இலங்கையை பொறுத்தவரை வேறெந்த நாடுகளும் மேற்கொள்ளாத மிகச் சரியான பாதுகாப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கூறியுள்ளனர்.
அனைத்து நாடுகளுமே கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னரே தமது நாட்டினை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த நிலையில் இலங்கை அவ்வாறு அல்லாது கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவ முன்னரே முன்னாயத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இப்போது வரையில் இலங்கையின் மருத்துவ கட்டமைப்பு மற்றும் வைரஸை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் சுகாதார வேலைத்திட்டம் மிக உயரிய மட்டத்தில் இருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.