கொரோனாவால் பெரும் பாதிப்புக்கு உள்ளான அமெரிக்கா இந்திய அரசிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை கேட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய ட்ரம்ப், ”ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கான தடையை நீக்கக் கோரி இந்தியப் பிரதமரிடம் பேசினேன்.
மாத்திரை ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதியளித்தால் அது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தேன். கேட்டுக்கொண்ட பின்பும், மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு முன்வராவிட்டால், பரவாயில்லை. ஆனால், எதிர்காலத்தில் பதிலடி இருக்கும். ஏன் பதிலடி கொடுக்கக்கூடாது ?” என்று மிரட்டல் கொடுக்கும் விதத்தில் பேசினார்.
ட்ரம்பின் இந்த மிரட்டல் பேச்சு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சசி தரூர், ”உலக நிகழ்வுகள் குறித்த எனது 10 வருட அனுபவத்தில், ஒரு அரசின் தலைமை மற்றொரு நாட்டின் அரசை இப்படி வெளிப்படையாக மிரட்டுவதை நான் கேள்விப்பட்டதுக்கூட இல்லை.
இந்தியாவிற்கு சொந்தமான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை ‘நம்முடையது’ என்று எப்படி கூறமுடிகிறது? இந்திய அரசு உங்களுக்கு அதை கொடுக்க முடிவு செய்தால் மட்டுமே அது உங்களுடையது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அமெரிக்கா கேட்டதால் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.