இதன்காரணமாக இந்தியாவில் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
இந்தியாவிலும் தனது ஆதிக்கத்தை இந்த கொலைகார வைரஸ் தொடர்ந்து பரப்பிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த வைரஸ் தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கடந்த மாதம் 24ஆம் திகதியில் உரையாற்றியிருந்தார்.
இதன்போது அவர் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிற இந்த வைரசை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவித்தார். இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருப்பதின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
வீட்டை விட்டு ஒரு அடி வெளியே எடுத்து வைத்தால்கூட, கொரோனா வைரஸ் வீட்டுக்குள் நுழைந்து விடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த 21 நாள் ஊரடங்கு கடந்த மாதம் 25ஆம் திகதி அமுலுக்கு வந்தது. கடந்த 14ஆம் திகதி நிறைவடையவிருந்தது. எனினும் 11ஆம் திகதி பிரதமர் மோடி, முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார்.
ஒவ்வொரு மாநிலத்தின் நிலவரத்தையும் கேட்டறிந்தார். அப்போது பெரும்பாலான மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து இந்த ஊரடங்கை மே மாதம் 3ஆம் திகதி வரை மேலும் 19 நாட்கள் நீடிப்பதாக பிரதமர் மோடி, அறிவித்தார்.
ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்படவில்லை. புதிது, புதிதாக பலரை பாதித்துக்கொண்டுதான் இருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
சமூக பரவல் என்ற மூன்றாவது கட்டத்துக்கு கொரோனா வைரஸ் சென்று விடக்கூடாது என்பதில் மத்திய அரசு கண்ணும், கருத்துமாக உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி எதிர்வரும் 27ஆம் திகதி காலை முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வழியாக முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.