கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவத் துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கடந்த 2ம் திகதி ஆலோசனை நடத்தி, சூழல்களைக் கேட்டறிந்தார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக இரண்டாவது தடவையாக காணொளி ஆலோசனை நடாத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் குழுத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வழியாக நேற்று ஆலோசனை நடத்தினார்.
பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படவே வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதேவேளை சில கடினமான முடிவுகளை எடுப்பது அவசியம் என பிரதமர் மோடியும் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பெரும்பாலான மாநில அரசுகள், தொற்றுநோய் மருத்துவ வல்லுநர்கள், நிபுணர்கள் ஆகியோர் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவினை நீட்டித்தால்தான் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், வரும் 11ம் திகதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், குறித்த ஆலோசனைக்குப் பின்பு ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், எத்தனை நாட்கள் நீட்டிக்கப்படும் என்பது குறித்தும், ஏதேனும் விதிமுறைகள் தளர்வு இருக்கமா என்பதும் தெரியவரும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.