இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹரி-மேகன் தம்பதி, தங்களது மகன் ஆர்ச்சியுடன் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் குடியேறினர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்கத் தொடங்கியதால், இந்தத் தம்பதி கடந்த மாத இறுதியில் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு மாறினர். அங்கு மேகனின் சொந்த ஊரான கலிபோர்னியா மாகாணத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேறினர்.
தற்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளிலிருந்து வெளியே வர இயலாத முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் ஹரி-மேகன் தம்பதி வீடுதேடிச் சென்று உணவு பொதிகளை வழங்கி வருகின்றனர்.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயற்பட்டுவரும் ‘Project Angel Food’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அவர்கள் இந்தச் சேவையை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், உணவுப் பொதியை பெறும் நபர்களிடம் அவர்களுக்கு உணவு வழங்க வரப்போவது யார் என்று முன்னதாக தெரிவிக்கப்படவில்லை. மேலும் ஹாரியும் மேகனும் முகக்கவசம் அணிந்து உணவுப் பொதிகளை விநியோகித்ததால் பெரும்பாலானவர்கள் அவர்களை அடையாளம் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.