LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, April 9, 2020

தேர்தலினை நடத்துவதற்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவே அறிவிக்க முடியும் – ஜனாதிபதியின் செயலாளர்

தேர்தலை நடத்துவது மற்றும் நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து உயர் நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியமில்லை, பொதுத் தேர்தலினை நடத்துவதற்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவே அறிவிக்க முடியும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜெயசுந்தர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “2020.03.31 மற்றும் 2020.04.01 ஆம் திகதிகளில் தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மக்கள் குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பணிகள் பற்றி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பப்படும் கடிதம் எனது அலுவலகத்திற்கு கிடைக்கு முன்னர் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டிருப்பதும், அக்கடிதங்கள் வேறு நபர்களுக்கும் பிரதிகள் குறிப்பிடப்பட்டிருப்பதையிட்டும் நான் ஆச்சரியமடைகின்றேன்.

கீழ்வரும் தகவல்களை சுறுக்கமாக குறிப்பிடுவது பொறுத்தமானதாகும்.

1. 2020.03.03 ஆம் திகதிய 2165/8ஆம் இலக்க வர்த்தமானி மூலம் 2020.03.02 ஆம் திகதி நல்லிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தை கலைத்து புதிய நாடாளுமன்றத்தை 2020.05.14 ஆம் திகதி கூட்டுவதற்கு திகதி குறிப்பிடப்பட்டது.

2. அவ்வறிவித்தலின் மூலம் புதிய நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கு 2020.04.25 ஆம் திகதி குறிப்பிடப்பட்டது.

3. அதன் பின்னர்,

(அ) பல்வேறு அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.

(ஆ) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சுயாதீன குழுக்கள் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 15வது உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படுவதற்கான வேற்பாளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர்.

(எ) அதில் வேட்பாளர்களின் எழுத்து மூல அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

(ஏ) நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 16 மற்றும் 17 வது உறுப்புரையின் பிரகாரம் கட்டுப்பணமும் செலுத்தப்பட்டிருந்தது.

குறித்த நிலைமைகளின் கீழ் பல சுயாதீன வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்

(அ) நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட கட்டளையை,

(ஆ) தேர்தல் திகதி குறிக்கப்பட்ட கட்டளை,

(இ) வேட்புமனு கையளிக்கும் திகதி மற்றும்

(எ) குறித்த தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் வேட்புமனுக்களை சமர்ப்பித்தல்

ஏற்றுக்கொண்டு உரிய முறையில் செயற்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24வது உறுப்புரையின் பிரகாரம் 24(1) உறுப்புரையின் A முதல் D வரையான உட்பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை குறிப்பாக எடுத்துக்காட்டி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி மூலம் அறிவிப்பொன்றை செய்திருக்க வேண்டும்.

2020.03.20 ஆம் திகதிய 2167/12 வர்த்தமானி அறிவித்தலில் 24(1) உறுப்புரையின் A மற்றும் C உட்பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை மட்டும், அதாவது அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் 2020 ஏப்ரல் 25 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும் என்றும் வாக்களிப்பு இடம்பெறும் தேர்தல் மாவட்டங்களையும் குறிப்பிட்டு அறிவிப்பொன்று வெளியிடப்பட்டிருந்தது.

அதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட 2020.03.21 ஆம் திகதிய 2167/19 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் 2020.04.25 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்றும், 2020.04.30ஆம் திகதி முதல் 14 நாட்களுக்குப் பின்னர் வரும் ஒரு நாளில் தேர்தல் நடைபெறும் திகதி குறிப்பிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

2020.04.25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாதாயின் 24(03) உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் தேர்தலை நடத்தக் கூடிய வேறு திகதியொன்றை விசேடமாக குறிப்பிட 24 (3) உறுப்புரையின் ஏற்பாடுகளின் கீழ் ஆணைக்குழு கடப்பாடுடையது என்பதை கவலையுடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

அதில் தேர்தல் நடத்தப்படும் திகதி, நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24(3) உறுப்புரையின் கீழ் பகிரங்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட திகதிக்கு 14 நாட்களுக்குப் பின்னராக இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள ஆலோசனையின் பேரில் 2020.05.28 ஆம திகதி அல்லது அதற்கு முன்னர் தேர்தலை நடத்த முடியாது என்ற அறிவித்தலை தற்போதைய சந்தர்ப்பத்தில் செய்ய முடியாது. தேர்தல் வாக்களிப்பு இடம் பெறும் திகதியை குறிப்பிடுவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என்பதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புக்களில் தலையிட ஜனாதிபதி எண்ணவில்லை.

பிற்போடப்பட்ட தேர்தல் குறித்து அறிவிக்கும் கால எல்லை நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24(3) உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம் 14 நாட்களுக்கு குறையாத காலமாகும் என்று அதாவது, பிற்போடப்பட்ட தேர்தல் வாக்களிப்பை 15வது நாளிலேனும் நடத்த முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தேர்தலில் வாக்களிப்பதற்கு இந்நாட்டில் உள்ள மக்களுக்கு உரிமையுள்ளது என்றும் அது அவர்களது தனி உரிமை என்பதையும் நான் குறிப்பிட வேண்டியதில்லை.

மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து விடயங்களையும் சாரம்சம்படுத்தி நோக்கும் போது அரசியலமைப்பின் 129 அத்தியாயத்தின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தும் பிரச்சினை எழவில்லை என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு எனக்கு ஆலோசனை கிடைக்கப்பெற்றுள்ளது“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7