இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
அத்துடன், நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் நாளை மோடி ஆலோசனை நடத்தவுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதாக சோனியா காந்தி கூறியுள்ளார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, 5 முக்கிய பரிந்துரைகளையும் அவர் வழங்கியுள்ளார்.
அந்தவகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 30 சதவீதம் குறைக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு மிகவும் தேவையான நிதிகளைத் திரட்டுவதற்கு, சிக்கன நடவடிக்கைகள் தேவை என்றும் கூறினார்.
குறிப்பாக ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான அழகுபடுத்தல் மற்றும் கட்டுமானத் திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், இந்தத் தொகை புதிய மருத்துவமனை உட்கட்டமைப்புகளை அமைக்க, மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கச் செலவிடலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசு, ஆண்டுக்கு ரூ.1,250 கோடியை விளம்பரங்களுக்காக செலவிடுகிறது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் இந்த விளம்பரங்களை இடைநிறுத்தி, அந்த நிதியைச் சேமிக்க வேண்டும் என்றும் சோனியா காந்தி கூறியுள்ளார்.
பிரதமர் கேர்ஸ் நிதியத்தில் (PM Cares Fund) உள்ள அனைத்து பணத்தையும் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு மாற்றி செயற்றிறன், வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய வேண்டும் எனவும் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.