உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நிலைகொன்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்திய மத்திய அரசாங்கம் மற்றும் மத்திய மாநில சுகாதார அமைச்சுக்கள் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இதுவரை இந்தியாவில் குறித்த வைரசுக்கு 4,778 பேர் இலக்காகியுள்ளனர். மேலும் குறித்த வைரஸினால் நாடளாவிய ரீதியில் 136 பேர் மரணித்துள்ளனர்.
இதேவேளை தமது சொந்த இடங்களை விட்டு வேறு மாநிலங்களுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த தொழிலாளிகள் தமது சொந்த ஊர்களுக்கு செல்வதில் பல இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவர்களில் பலர் கால் நடையாக தமது மாநிலங்களுக்கு பயணித்த விடயம் தேசிய ரீதியில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இதேவேளை நாளாந்த வருமானத்தை எதிர்நோக்கியுள்ள பலர் இந்தியாவில் மிகுந்த பொருளாதார சிக்கலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நிலைவரங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி “இந்திய மக்கள் சாதி, மதம், வகுப்பு ஆகிய வேறுபாடுகளை கடந்து ஒன்றுபடுவதற்கான வாய்ப்பாக நம் நாட்டுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அமைந்துள்ளது.
கொரோனா வைரஸை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே பொது நோக்கத்துக்காக அவர்கள் ஒன்று திரள்வார்கள். கருணை, இரக்கம், சுய தியாகம் ஆகியவையே இதற்கான மையமாக விளங்கும். இந்திய மக்கள் ஒன்றிணைந்து, கரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவார்கள்” என கூறியுள்ளார்.