இது தொடர்பாக தமிழக அரசின் நலவாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 34 ஆய்வகங்களில் 65 ஆயிரத்து 977 மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 56 ஆயிரத்து 836 மாதிரிகளில் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதேவேளை, நேற்று ஒரேநாளில் 54 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம்காணப்பட்டுள்ள நிலையில் மொத்தம் பாதிப்பு ஆயிரத்து 683ஆக உள்ளது.
இதனிடையே, சந்தேகத்துக்குள்ளான ஆயிரத்து 787 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று, மேலும் 90 பேர் குணமடைந்துள்ளதால் இதுவரை 752 பேர் நோய்த் தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
908 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதுடன் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் மரணித்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, மாவட்டங்களைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக சென்னையில் மேலும் 27 பேர் கொரோனாவால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் மேலும் 5 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 4 பேரும், திண்டுக்கலில் 3 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை நெற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 110 பேரும், கோவையில் 134 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுளளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 37 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் உள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் இன்னும் கொரோனாவின் பிடியில் சிக்காமல் உள்ளது.