இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 590 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 369 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தடுப்புப் பணியில் முன்வரிசையில் நின்று களப்பணியாற்றும் பொலிஸ் துறையிலும் பலருக்கு கொரோனா பரவியுள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை பொலிஸ் துறையில் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மும்பை பொலிஸ் துறையைச் சேர்ந்தவர்கள்.
மும்பையில் மட்டும் கடந்த 3 நாட்களில் 3 பொலிஸார் கொரோனாவால் மரணித்துள்ளனர். இதனையடுத்து, மும்பை பொலிஸில் பணியாற்றும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்பே நோய்த்தாக்கம் உள்ளவர்களை வீடுகளுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மரணித்துள்ள 3 பொலிஸாரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள பொலிஸாரும் 55 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டு 55 வயதுக்கு மேற்பட்ட பொலிஸார் மற்றும் அதிகாரிகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த விடுமுறை அறிவிப்பை மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ளது.