LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, April 29, 2020

விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி!

விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட 50 தொழில்
அதிபர்கள் திருப்பி செலுத்தாத 68 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ரிசேர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காங்கிரஸ் கட்சி முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக தகவலை வெளியிட்டுள்ள ரிசேர்வ் வங்கி, தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் மொத்தம் 68 ஆயிரத்து 607 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.

இதேபோல் வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டுத் திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பித்தனர். இது தவிர மேலும் பல தொழில் அதிபர்களும் பல்லாயிரம் கோடி ரூபாயை வங்கிகளில் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளனர்.

இந்த வங்கிக் கடன் மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ.யும் அமுலாக்கப் பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றன.

வெளிநாடுகளில் இருக்கும் விஜய் மல்லையா உள்ளிட்ட தொழில் அதிபர்களை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. விஜய் மல்லையா லண்டனில் இருந்தபடி தனக்கு எதிரான வழக்குகளை சந்தித்து வருகிறார்.

இதுதொடர்பாக, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வங்கிகளில் அதிக அளவில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத 50 பேரின் பெயர்ப் பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டார். இதனால் சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கிக் கடன் மோசடிப் பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

அதன்படி, கடந்த 24ஆம் திகதி ரிசேர்வ் வங்கி அளித்த பதிலில், வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத 50 பேரின் பெயர்களையும், கடந்த ஆண்டு செப்ரெம்பர் 30ஆம் திகதிவரை அவர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், ரிசேர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் தொழிலதிபர் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்துக்கு 5,492 கோடி, ஆர்.இ.ஐ. அக்ரோ நிறுவனத்திற்கு 4,314 கோடி, வின்சம் டயமண்ட்ஸ் நிறுவனத்திற்கு 4,076 கோடி, ரோட்டேமேக் குளோபல் நிறுவனத்திற்கு 2,850 கோடி, குடோஸ் கெமி நிறுவனத்துக்கு 2,326 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான ருச்சி சோயா நிறுவனத்துக்கு 2,212 கோடி, சூம் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு 2,012 கோடி, விஜய் மல்லையாவின் கிங்பிஷர் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு 1,943 கோடி, பிரீசியஸ் ஜூவெல்லரி அன்ட் டயமண்ட்ஸ் நிறுவனத்துக்கு 1,962 கோடி மற்றும் மெகுல் சோக்சியின் கிலி இந்தியா மற்றும் நட்சத்திரா ஆகிய நிறுவனங்களுக்கு முறையே 1,447 கோடி மற்றும் 1,109 கோடி ரூபாயும் கடன் தள்ளுபடி செய்துள்ளதாக ரிசேர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிற்றர் பதிவில் தெரிவிக்கையில், “நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட வங்கி மோசடியாளர்கள் 50 பேர் வாங்கிய ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடனை மத்திய அரசு இரத்துச் செய்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசேர்வ் வங்கி அளித்த பதில் மூலம் தெரியவந்துள்ளது.

வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத 50 பேரின் பெயர்களை வெளியிடுமாறு முன்பு நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, நிதியமைச்சர் அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். ஆனால் இப்போது நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பாரதீய ஜனதாவின் நண்பர்கள் பெயர்களை ரிசேர்வ் வங்கி வெளியிட்ருக்கிறது. இந்த உண்மையை நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்காமல் மறைத்தது ஏன்?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரை மத்திய அரசு 6 இலட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை இரத்துச் செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7