கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பையநாடு பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் 4 மாத பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை இன்று (வெள்ளிக்கிழமை) காலை உயிரிழந்தது.
பிறந்ததில் இருந்தே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த குழந்தைக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் முதலில் மஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏப்ரல் 17ஆம் திகதி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து கடந்த 21ஆம் திகதி கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுவந்தனர். அப்போது குழந்தைக்கு காய்ச்சலும், மூச்சுத்திணறலும் இருந்துள்ளது.
தற்போது, அந்தக் குழந்தை இறந்ததையடுத்து, குழந்தைக்கு மஞ்சேரியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளித்த 5 வைத்தியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குழந்தைக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை. வெளிநாடு சென்று வந்த உறவினர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. ஆனால் அந்த அந்த உறவினர் எந்த வகையிலும் குழந்தையுடன் நேரடித் தொடர்பில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
கேரளாவில் இதுவரை 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 324 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கழந்தையின் உயிரிழப்புடன் சேர்த்து கேரளாவில் இதுவரை மூவர் மரணித்துள்ளனர்.