LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+29°C


















Wednesday, April 29, 2020

கல்முனையில் முப்படையினர் தங்குவதற்காக 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள்- வைத்தியர் சுகுணன்

அம்பாறை மாவட்டம் கல்முனை சுகாதார சேவை பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளில் முப்படையைச் சேர்ந்த படையினர் தங்குவதற்காக 3
தனிமைப்படுத்தல் நிலையங்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர், “முப்படையினரின் விடுமுறை அரசாங்கத்தினால் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்பட்ட நிலையில் தத்தமது முகாமிற்கு மீண்டும் வருகைதரும் முப்படையினரை தற்காலிகமாக இடைத் தங்கல் முகாம்களில் தங்கவைப்பதற்காக தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் அம்பாறை, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவிற்குட்பட்ட தனிமைப்படுத்தல் மையங்களில் இதுவரை 158 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் 74 பேரும், காஞ்சினங்குடா பகுதியில் அமைந்துள்ள கால்நடைக் பயிற்சி மையத்தில் 44 பேரும் அத்துடன் கல்முனை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் 40 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெலிசறை கடற்படை முகாமில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முப்படையினரின் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது முகாம்களில் இடப்பற்றாக்குறையினால் இவ்வாறான தனிமைப்படுத்தல் முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. இவர்களால் எவ்வித ஆபத்தும் இல்லை. இதேவேளை கல்முனைப் பிராந்தியத்தில் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, நாவிதன்வெளி வேப்பையடி கலைமகள் வித்தியாலயம், அக்கரைப்பற்று சென்.ஜோன்ஸ் வித்தியாலயம், பாணமை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய 4 பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்களாகக் காணப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அம்பாறை பிராந்தியத்தில் பொத்துவில் பாணமை மகா வித்தியாலயம், உகன ஹிமிதுறவ வித்தியாலயம் , உகன கலகிட்டியாகொட மகா வித்தியாலயம் ஆகிய 3 பாடசாலைகளை தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விடுமுறையில் உள்ள முப்படையினரையும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு பாதுகாப்பு அமைச்சால் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் தமது கடமைகளுக்குத் திரும்ப வசதியாக கடந்த திங்கட்கிழமை நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்திக் கண்காணிப்பதற்காக இத்தனிமைப்படுத்தல் நிலையங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7