டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 893ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்திருக்கின்றது. அவர்களில் 43 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று டெல்லி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒன்பது பேர் 50 முதல் 60 வயது நிரம்பியவர்கள் என்றும், பத்து பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 31 ஆயிரத்து 878 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் இரு வாரத்தை பூர்த்தி செய்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
இதனிடையே, ஜஹாங்கிர்புரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக அந்தப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் டெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 76ஆக உயர்ந்துள்ளது.