டெல்லியில் கடந்த 24 ஆம் திகதி தப்லீக் ஜமாத் அமைப்பின் சார்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுடதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தொடர்ந்து 2 நாட்களாக அறிவித்துவந்தது.
இதனையடுத்து திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை, நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் இன்று முதற்கட்டமாக திருவாரூரைச் சேர்ந்த 26 பேருக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. அதேபோல முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 4 பேர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த 13 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு சுற்றுலா பயணமாக திருவாரூருக்கு வருகைதந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, தற்போது அவர்களும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவேளை, தமிழகத்தில் நேற்று மட்டும் 57 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் 124 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.