உயித்தெழுந்த போது
கிறீஸ்து
முரட்டுத்துணியாலான மாஸ்க் அணிந்திருந்தார்
தோமஸ்
திருக்காயங்களைச் சோதிக்கமுன்னும் பின்னும்
கைகளைத் தொற்று நீக்கியால் கழுவினான்
பூமியின் பாரம் குறையலானது
நாடு
முதியவர்களை
நாய்களைப் போல சாக விட்டது
சைரனும் சேமக்காலை மணியும்
ஒலிக்காத பொழுதுகளில்
இத்தாலியர்கள்
ஆளரவமற்ற தெருக்களை
இசையால் நிரப்பினார்கள்
கள்ளத் தீர்க்கதரிசிகள்
ஓடியொளித்த காலமொன்றில்
மருத்துவர்களே
சமூகத்தின் பேச்சாளர்களாக மாறினார்கள்
காற்றைப் பட்டங்கள் கைப்பற்றின
கடலை மீனினங்கள் கைப்பற்றின
வானத்தைப் பறவைகள் கைப்பற்றின
ஜலந்தரின்
மாசற்ற வானில்
இமயமலை
ஒரு நிலக்காட்சி ஓவியம் போல படர்ந்து கிடந்தது
கிறீஸ்து
மாஸ்க் இல்லாமல்
உயிர்த்தெழும் காலமொன்றுக்காக
பூத்திருக்கிறது கொன்றை
நிலாந்தன் மகா