பிரிட்டனில் கோவிட்-19 தாக்கத்தினால் ஒரேநாளில் 563 பேர் பலியாகியதனை அடுத்து, இறப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மார்ச் 18 முதல், மொத்தம் 14 இலட்சத்து 96 ஆயிரத்து 651 பேர் கோவிட்-19 குறித்த அறிகுறிகளை மட்டுமே பதிவு செய்தனர். அதேநேரத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியனில் கால் பகுதியினர் 111 மற்றும் 999 அழைப்புகள் மூலம் தெரிவித்த அறிகுறிகளின் அடிப்படையில் அவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டனர்.
முன்னதாக, மார்ச் 31 மாலை 4 மணி நிலைவரப்படி இறப்புகள் 563 அதிகரித்து மொத்தம் 2,352 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
“இது ஒரு சோகமான நாளாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை” என பிரதமர் ஜோன்சன் ருவிற்றரில் வெளியிட்ட காணொளிச் செய்தியில் குறிப்பட்டுள்ளார்.
இதேவேளை, வணிகச் செயலாளர் அலோக் சர்மா, மக்கள் தொடர்ந்து அரசாங்க வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கோரியுள்ளார்.
“நாங்கள் ஏன் இந்தக் கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறோம் என்பதை நாடு முழுவதும் உள்ள மக்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால் மிகவும் முக்கியமானது என்னவென்றால், இவற்றை மிக விரைவாக நிறுத்தாவிட்டால், நாடு முழுவதும் மக்கள் மேற்கொண்ட பாரிய முயற்சிகள் வீணடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது.
மேலும் ஆபத்தான நாடுகளின் இரண்டாவது உச்சத்தை நாம் காணக்கூடும். அதனால் அரசாங்க வழிகாட்டுதல்களை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அத்துடன் தற்போதைய சூழல் குறித்து தாம் மதிப்பாய்வு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.