கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப்பின், முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்திய சுகாதார நிறுவனம் கூறியுள்ளபடி, அறிகுறி இருந்தால்தான் ஆய்வுசெய்ய முடியும். 1,981 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அறிகுறி இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்து, சதகம் என வந்தால் தனிமைப்படுத்தியுள்ளோம்.
வீட்டு வாடகை தொடர்பான பிரச்சினை நாடு முழுவதும் உள்ள பொதுவான பிரச்சினை. மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் படிப்படியாக ஒவ்வொரு பிரச்சினையாக அரசு தீர்த்து வருகிறது. இந்த பிரச்சினையையும் அரசு கவனத்தில் கொள்ளும்.
இறப்பு, திருமணம் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி. எல்லோரும் செல்ல வேண்டும் என்றால் 144 தடை உத்தரவு அவசியமில்லையே. குடும்பத்தில் எவரேனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அதற்காகவும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் இன்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்க ளில் வட்டாட்சியர்களிடமே அனுமதி வாங்கிச் செல்லலாம்.
நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளோம். இது தொற்று நோய். அதிலும் கடுமையான நோய்.இந்த நோய் தடுப்பே தனிமைதான். தனிமையில் இருந்தால் நோயை தடுக்கலாம். தற்போது 2-ம் நிலைக்கு வந்துள்ளதால் இந்த நிலையிலேயே நோய் பரவாமல் தடுத்துவிட்டால் பிரச்சினை ஏற்படாது. மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேறு யாருக்கேனும் நோய் அறிகுறி உள்ளதா என்று பார்க்க வேண்டும். இது மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதில், அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டவோ, அரசியல் செய்வதற்கோ அவசியமில்லை.” என கூறினார்.