சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்ந்த அறிவிப்புகளை முதலமைச்சர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டார்.
இதன்போது, நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸிக் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடு துறையைப் பிரித்து முதலமைச்சர் அறிவித்துள்ளதை கொண்டாட அங்கு அரசியல் கட்சியினர், விவசாயிகள் பலரும் கூட்டமாகச் சேர்ந்து நகரங்களில் சுற்றியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறையில் அ.தி.மு.க.வினர், விவசாயிகள், வர்த்தகர்கள் எனப் பலரும் வீதிகளுக்கு வந்து பட்டாசுகள் வெடித்தும் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ள நிலையில், மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. முக்கியமாக கை குலுக்குவதையே தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், கூட்டமாகச் சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை ஊட்டி கொரோனாவின் தீவிரத்தை உணராமல் நடந்து கொண்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது