ஒத்துழைப்பு அவசியம் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
பீஜிங்கிலுள்ள மருத்துவ ஆய்வு கூடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பொது சுகாதாரப் பாதுகாப்பு என்பது ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கும் பொதுவானதாகும்.
அந்த வகையில், கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் அனைத்து நாடுகளுக்கும் பங்குள்ளது.
எனவே, அந்த வைரஸ் பரவாமல் தடுத்து நிறுத்துவதற்குரிய தடுப்பு மருந்தையும், அந்த வைரஸை அழித்து, அதன் மூலம் கொரோனா வைரஸ் காய்ச்சலைத் தீர்ப்பதற்கான மருந்தையும் கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தங்களிடயே ஒத்துழைக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தொடர்பாக தாங்கள் மேற்கொண்ட ஆய்வுத் தகவல்களை ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் சிலருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டது.
குறித்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் காரணமாக இந்த காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.
மனிதர்களின் உடலில் பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த அது, சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிர்களை காவு கொண்ட சார்ஸ் வைரஸின் தன்மையை ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.
குறித்த வைரஸ் பரவலை சர்வதேச சுகாதார அவசர நிலையாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கடந்த மாத இறுதியில் அறிவித்தது.
மேலும், கொரோனா வைரஸ் என்ற பொதுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த அந்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ என அந்த அமைப்பு பெயரிட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.