கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரது சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (புதன்கிழமை) நிராகரித்துள்ளார். இதன் மூலமாக நான்கு குற்றவாளிகளின் கருணை மனுவும் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
எனவே, விரைவில் நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரையும் மார்ச் 3ஆம் திகதி தூக்கிலிட விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. எனினும் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் இதுவரை மூன்று முறை நிறுத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.