கொரோனா வைரஸைக் கட்டுப்படுவதற்காக பிரதமர் மோடி தினமும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஆனால் பொதுமக்கள் மத்திய அரசு வெளியிட்ட கொரோனா எச்சரிக்கை விதிமுறைகளை சரியானபடி பின்பற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ருவிற்றர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறகையில், “கொரோனா வைரஸின் ஆபத்தை பெரும்பாலான மக்கள் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள். அது வருத்தமளிக்கிறது. நேற்று நடந்த மக்கள் சுய ஊரடங்கைக் கூட பலர் தீவிரமாகக் கடைப்பிடிக்கவில்லை.
கொரோனா வைரஸ் மேலும் பரவக்கூடாது என்பதற்காகத்தான் மத்திய அரசு மிகக் கடுமையான விதிமுறைகளை அறிவித்துள்ளது. ஆனால் பலரும் அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் உள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள மருத்துவ விதிமுறைகளை பொதுமக்கள் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பொதுமக்கள் மருத்துவ விதிமுறைகளை தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்களா என்பதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா வைரசின் தீவிரத்தை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
அப்படியென்றால்தான் நாம் அதைக் கட்டுப்படுத்த முடியும். வீடுகளுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.
பணப் பரிமாற்றத்துக்கு டிஜிற்றல் மூலம் பணிகளை மேற்கொள்ளுங்கள். இது சமூகத்தில் இருந்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளுக்குள் இருந்தால்தான் அவர்களையும், அவர்களது குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.