இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) விசேட உரையாற்றினார்.
அவர் கூறுகையில், “கடந்த 2 மாதங்களாக கொரோனா அச்சுறுத்தலை சந்தித்து வருகிறோம். உலகப் போர் போன்று மிக மோசமான தாக்கத்தை இந்த வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மிக மனத் தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்துப் போரிடுகிறது. கொரோனா வைரஸ் பரவுவது குறித்த பதிவுகளை அரசு உன்னிப்பாகக் கவனித்துவருகிறது.
ஒவ்வொரு இந்தியரும் இந்த ஆபத்தான சூழலில் விழிப்புடன் இருக்க வேண்டும். வரும் சில வாரங்கள் பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்புத் தரவேண்டும். கொரோனா இந்தியாவைப் பாதிக்காது என நினைப்பது தவறு. கொரோனா பரவலைத் தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக அவசியம். கொரோனாவுக்கு தடுப்பு மருந்தோ அதனை முன்கூட்டியே அறியும் வசதியோ இதுவரை இல்லை.
எனவே, கொரோனா பரவலைத் தடுக்க, மக்கள் தனிமைப்படுத்துவது மிக முக்கியம். மக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்த்து முடிந்தவரை தங்களைத் தனிமைப்படுத்துங்கள். மக்கள் விழிப்புணர்வோடு கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். இதில் அலட்சியம் வேண்டாம். மக்கள் அலுவலகங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும். அவசியம் இருந்தால் மட்டுமே மக்கள் வெளியே செல்ல வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.