சமய ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக்கட்டுரை தொடர்பாக ஒரு சமூக செயற்பாட்டாளர் என்னோடு கதைத்தார். அவர் காரைநகரில் உள்ள சமூக மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்தவர்.கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது இந்த அமைப்பு என்னோடு தொடர்பில் இருந்தது.அவர்களை ஆதரித்து கட்டுரைகளையும் எழுதி இருக்கிறேன்.
என்னோடு தொலைபேசியில் கதைத்த நண்பர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். சாதிரீதியாக சமூகத்தை பிரிப்பதற்கு நாங்கள் எதிராகவே இருப்போம். நீங்கள் கூறுவது போல தேசிய விடுதலை எனப்படுவது சமூக விடுதலையை உள்ளடக்கியதுதான். சமூக விடுதலை எனப்படுவது தேசிய விடுதலைக்கு எதிராகத் திரும்பக்கூடாது. ஆனால் காரைநகரில் நமது சமூகத்தின் மீதான அவமதிப்பும் புறக்கணிப்பும் அப்படியே இருக்கும் பொழுது நாங்கள் எப்படித் தமிழ் தேசிய நீரோட்டத்தில் கரைவது? என்று கேட்டார் இக்கேள்விக்கு பதில் கூற வேண்டியது அரங்கில்லுள்ள தமிழ் தேசிய கட்சிகள் தான்.
தேசிய விடுதலை எனப்படுவது சமூக விடுதலையையும் உள்ளடக்கியதுதான் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட சமூகங்கள் மத்தியில் தமிழ் தேசியக் கட்சிகள் போதியளவு வேலை செய்திருக்கவில்லை. அந்த வெற்றிடம்தான் தேசிய வாதத்துக்கு எதிர் நிலைப்பாடு உள்ள கட்சிகள் மேற்படி சமூகங்களை தமது வாக்கு வங்கிகளாக மாற்ற முயற்சிப்பதற்கு காரணம்
அதாவது தேசிய நோக்கு நிலையிலிருந்து தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் முரண்பாடுகளை கையாளத் தேவையான பக்குவமும் தத்துவத் தரிசனமும் அரங்கில் உள்ள தமிழ் தேசிய கட்சிகளிடம் இல்லை. அந்த வெற்றிடத்தில்தான் இவ்வாறு சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சை குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனவா?
இவ்வாறு சமூக ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப்படும் சமூகங்கள் தங்களுக்குள் திரளாகி தமக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது தவிர்க்க முடியாதது. சமூக விடுதலைக்காக குறிப்பிட்ட சமூகங்களை திரளாக்காமல் தேசிய விடுதலைக்கான பெருந்திரளாக்கம் பற்றி சிந்திக்க முடியாது. ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் அந்த ஒடுக்குமுறையின் பெயரால் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகத் திரளாவது தவிர்க்க முடியாதது. தேசிய விடுதலை எனப்படுவது சமூக விடுதலையையும் உள்ளடக்கியதுதான். ஒரு தேசமாகச் சிந்திப்பது என்பது ஜனநாயகத் அடிச்சட்டத்தின் மீது ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற அடிப்படையில் திரளாக்குவதுதான். எந்த ஓர் அடையாளம் காரணமாக ஒரு மக்கள் திரள் ஒடுக்கப்படுகிறதோ அந்த அடையாளத்தின் பேரால் அவர்கள திரளாக்குவது தவிர்க்க முடியாதது.
இவ்வாறு இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் அந்தப் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு பெருந் திரளாகுவதே ஒரு தேசமாக வாழ்தல் என்று பொருள்படும். ஆனால் அந்தக் திரட்சிக்குள் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடாது.
இந்த விளக்கம் மத முரண்பாடுகளுக்கும் பொருந்தும். ஒரு தேசிய திரட்சிக்குள் மதங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்க முடியாது. மாறாக மதப் பல்வகைமை அங்கே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு மதப் பல்வகைமையை ஏற்றுக்கொண்டு தேசிய நோக்கு நிலையிலிருந்து மத முரண்பாடுகளை அணுக வேண்டும். ஆனால் அண்மைக்காலங்களில் தமிழ்ச் சமூகத்துக்குள் மத முரண்பாடுகள் மதநோக்கு நிலையில் இருந்தே அணுகப்படுவதாகத் தெரிகிறது.
குறிப்பாக திருக்கேதீச்சரம் வளைவு விவகாரம், ஊர்காவற்றுறையில் வீதிகளின் பெயர் மாற்றப்பட்ட விவகாரம், எழுவைதீவில் இரண்டு பாடசாலைகள் விவகாரம் என்பன ஏற்படுத்திய எதிர்விளைவுகள் அதைத்தான் காட்டுகின்றன.
திருக்கேதீச்சரம் வளைவு விவகாரத்தை நீதிமன்றத்துக்கு போக விட்டது தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் ஒரு தோல்வி. அந்த விவகாரத்தை மத பீடங்கள் அணுகுவதற்கு பதிலாக அதை ஒரு சட்டப் பிரச்சினையாக அணுகுவதற்கு பதிலாக அதை ஒரு தேசிய பிரச்சினையாக தேசிய நிலையிலிருந்து ஒரு சிவில் அமைப்போ அல்லது கட்சியோ அல்லது பேரவை போன்ற ஒரு மக்கள் இயக்கமோ கையாண்டு இருந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட அரசியல் தரிசனமுடைய அமைப்புகளும் கட்சிகளும் இல்லாத வெற்றிடத்தில் அந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறது.
அந்த வெற்றிடம் காரணமாகத்தான் ஊர்காவற்றுறையில் வீதிகளைப் பெயர் மாற்றுவது ஒரு விவகாரமாகியது. எழுவைதீவில் இரண்டு பாடசாலைகள் விவகாரம் மத முரண்பாடுகளைப் பெரிதாகும் விதத்தில் விளைவுகளை ஏற்படுத்தியது.
குறிப்பாக எழுவைதீவு விவகாரத்தில் யாழ்பாணத்தை மையமாகக் கொண்ட வலம்புரி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட பத்தியில் தகவற் பிழைகள் இருப்பதாக எழுவைதீவு மக்களில் ஒரு பகுதியினர் கூறுகிறார்கள்.அப்பத்திரிகையின் அலுவலகத்துக்கு வந்த ஒரு குழுவில் இந்து மதத்தினரும் அடங்குவர் என்று அவர்கள் கூறுகிறார்கள். தமக்கு நியாயம் வேண்டும் என்று கேட்டே தாங்கள் அப்பத்திரிகை அலுவலகத்துக்கு வந்ததாக கூறுகிறார்கள்.அவர்களை அவ்வாறு போகுமாறு தூண்டியது ஒரு கத்தோலிக்க மதகுருவே என்று பத்திரிகைத் தரப்பு குற்றம் சாட்டுகிறது.
இது விடயத்தில் யார் பிழை என்பதை விடவும் இந்த விவகாரத்தை எந்த நோக்கு நிலையிலிருந்து அணுக வேண்டும் என்பதே முக்கியமானது. இந்த விவகாரத்தை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்தே அணுக வேண்டும்.
வலம்புரி பத்திரிகை பத்திரிகை கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்களுக்கு களம் அமைத்துக் கொடுத்த ஒரு பத்திரிகை. கூட்டமைப்புக்கு எதிரான குரல்களை அது ஒலிக்கச் செய்தது. அந்த அடிப்படையில் கூட்டமைப்புக்கு எதிரான ஒரு மாற்று அரசியலுக்கு உரிய ஊடகத் தளமாக வலம்புரி பத்திரிகை குறிப்பிடத்தக்க அளவிற்கு மேலெழுந்தது. குறிப்பாக விக்னேஸ்வரனின் எழுச்சி, தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சி, அப்பத்திரிகையின் எழுச்சி என்பன ஏறக்குறைய சமாந்தரமானவை.
வலம்புரியின் ஆசிரியர் தமிழ் மக்கள் பேரவையில் ஒரு பிரதானி. எல்லா எழுக தமிழ் ஆர்ப்பாட்டங்களின் போதும் அவரை முன்னணியில் காணலாம். தமிழ் மக்கள் பேரவையில் விக்னேஸ்வரனின் முதன்மையை தொடர்ச்சியாக வலியுறுத்தும் ஒருவர் அவர். விக்னேஸ்வரன் தனது புதிய கூட்டை அண்மையில் அறிவித்த பொழுது அவரும் அங்கே இருந்தார். கடந்த பத்தாண்டுகளில் தமிழ் தேசிய அரசியலில் ஒரு மாற்று தளத்துக்கு உரிய ஊடகமாக வரமுயலும் அப்பத்திரிகை மத முரண்பாடுகளை தமிழ்தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகினால் அது தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக இதயத்தை பலப்படுத்தும்.
வலம்புரி பத்திரிகை இந்துமதச் சாய்வுடன் செய்திகளை எழுதுவதாக ஒரு அவதானிப்பு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு வடமாகாணசபையின் முஸ்லிம் உறுப்பினர் தொடர்பிலும் அப்பத்திரிகை வெளியிட்ட செய்தி சர்சையாகியது. குறிப்பாக மத விவகாரங்களில் அப்பத்திரிகையின் நிலைப்பாடு இந்து மதத்துக்கு அதிகம் சாய்வோடிருப்பதாக ஏனைய மதப் பிரிவினரால் பார்க்கப்படுகிறது. இது மாற்று அரசியலுக்கும் கூடாது. விக்னேஸ்வரனுக்கும் கூடாது.
மத முரண்பாடுகளை மத நோக்கு நிலையிலிருந்து அணுகாமல் ஆகக் கூடிய பட்சம் தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகினால் சில சமயங்களில் அகத்தணிக்கையும் சில சமயங்களில் மதப் பொறையும் தேவைப்படலாம்.
தமிழ்தேசிய பரப்பில் இந்துக்களே அதிகம் உண்டு. எனவே இந்துக்கள் தாம் பெரும்பான்மை மதப் பிரிவினர் என்ற அடிப்படையில் ஏனைய சிறுபான்மை மதப் பிரிவினரை சமமாகப் பார்க்க வேண்டும்.அதாவது தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து மதப் பிணக்குகளை அணுக வேண்டும். அதுதான் தமிழ் மக்களை ஒரு பெரும் திரளாக திரட்டும் இல்லையென்றால் மதத்தின் பெயரால் தமிழ் மக்களை அது பிரித்துவிடும்.
இது விடயத்தில் ஈழத்தமிழர்களுக்கென்று ஒரு செழிப்பான பாரம்பரியம் உண்டு. இலங்கை தீவில் முதலில் தோன்றிய இளையோர் இயக்கமாகிய ஜப்னா யூத் கொங்கிரஸ் யாழ்ப்பாணத்தில்தான் தோன்றியது. அந்த அமைப்பை ஒருங்கிணைத்தவர் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவரான ஹண்டி பேரின்பநாயகம். அவருக்குப்பின் தமிழ் மக்களின் சாத்வீகப் போராட்டங்கள் என்று அழைக்கப்பட்ட வன்முறையற்ற போராட்டங்களை முன்னெடுத்தவர் எஸ். ஜே. வி செல்வநாயகம். அவர் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர். அதிகம் இந்துக்களை கொண்ட ஒரு சமூகம் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவரை தந்தை என்று அழைத்தது. ஈழத்து காந்தி என்றும் அழைத்தது. இது காரணமாகவே தனது இறுதிக் காலகட்டத்தில் தந்தை செல்வா தனது பூதவுடலை இந்து முறைப்படி வேட்டி அணிவித்து தகனம் செய்யுமாறு இறுதி விருப்பம் தெரிவித்திருந்தார்.அதாவது ஈழத்தமிழர்கள் மதம் பார்த்துத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை.
அதுமட்டுமல்ல கடந்த வருடம் ஈஸ்டர் குண்டு வெடிப்பில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழ்க் கிறீஸ்தவர்களே. ஆனால் அதற்காக குறிப்பாக மட்டக்களப்பில் தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ரத்தம் சிந்தும் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடவேயில்லை. ஈஸ்ட்டர் குண்டு வெடிப்பிற்குப் பின் ஒப்பீட்டளவில் தமிழ்ப் பகுதிகள்தான் முஸ்லீம் மக்களுக்கு அதிகம் பாதுகாப்பானவைகளாகக் காணப்பட்டன என்றும் கூறலாம்.
இப்படிப்பட்டதோர் மிகச் செழிப்பான மதப் பல்வகைமைப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு மக்கள் கூட்டம் அண்மைக் காலங்களில் மத முரண்பாடுகளால் பிளவுபடும் ஒரு நிலைமை மேலும் வளரக் கூடாது. இப்படிப்பட்ட முரண்பாடுகளை தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகிக் கையாண்டு தீர்க்கத்தக்க முதிர்ச்சியை, பக்குவத்தை, ஏற்புடைமையை, ஜனவசியத்தை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் இயக்கங்கள் அப்படி ஒரு வளர்ச்சியை அடைய வேண்டும். இல்லையென்றால் சாதியின் பேரால் சமயத்தின் பேராலும் பிரதேசவாதத்தின் பெயராலும் தமிழ் மக்கள் பிரிக்கப்பட்டு விடுவார்கள்.