சீன மரபு ஓவியங்களில் வரும் நிலக்காட்சிகளில் ஒரு முக்கியமான அம்சம் உண்டு. அங்கே இயற்கை பிரம்மாண்டமாகக் காட்டப்படும். அப்பேரியற்கைக்கு முன் மனிதன் மிகச் சிறியவனாக வரையப்பட்டிருப்பான். அவன் கட்டிய வீடுகள் அவனுடைய தயாரிப்புக்கள் யாவும் பேரியற்கைக்கு முன் மிகச் சிறியவைகளாகக் காணப்படும். சீன மரபு ஓவியங்கள் சீனாவின் மகத்தான தத்துவ ஞானமாகிய தாவோயிஸத்தின் வழி வந்தவை என்று நம்பப்படுகிறது. அங்கே வெளியை பிரம்மாண்டமாக காட்டுவதற்காக மனிதன் மிகச் சிறியவனாக காட்டப்படுகிறான். இயற்கைக்கு முன் மனிதன் அற்பமானவன் என்ற உணர்வை அந்த ஓவியங்கள் தரும்.
சீனாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரசும் அப்படி ஒரு உணர்வையே தருகிறது. இப்பொழுது சீனா உலகப் பேரரசுகளில் ஒன்று. உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் முதன்மையானது. எதிர்காலத்தில் வரக்கூடிய மஞ்சள் ஆபத்து பற்றிய மேற்கத்தைய ஊகங்கள் உண்டு. (yellow danger) சீனாவின் “பட்டியும் நெடுஞ்சாலையம்” என்ற திட்டத்தின் மூலம் அது உலகின் பெரும்பாலான நாடுகளை தன்னை நோக்கி இணைத்துக்கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் குறிப்பாக சிறிய நாடுகளை தனது கடன் பொறிக்குள் லாவகமாக சிக்க வைத்திருக்கும் ஒரு பின்னணியில் ஒரு வைரஸ் வந்து மனிதனை அற்பமானவனாக காட்டியிருக்கிறது.
மனித நாகரீகத்தின் கண்டுபிடிப்புக்கள் அதன் மகத்தான சாதனைகள் அனைத்தையும் ஒரு வைரஸ் கேள்விக்குள்ளாக்குகிறது. ஒரு பேரரசை அது ஓரளவுக்கு தனிமைப்படுத்தியிருக்கிறது.
மனிதர்கள் ஒருவரை மற்றவர் தொட்டு கொள்ள முடியாத ஒரு நிலை. நெதர்லாந்துப் பிரதமர் கை குலுக்குவதை நிறத்துமாறு நாட்டு மக்களுக்குக் கூறியுள்ளார். ஐரோப்பியப் பண்பாட்டின் உலர்ந்த கழிப்பறைகளைக் குறித்து எழுதிய இண்டி சமரஜிவா என்ற சிங்கள எழுத்தாளர் வெள்ளைக்காரர்களை நோக்கி இனி “தண்ணீரால் அடிக்கழுவுங்கள்”என்று ஆலோசனை கூறும் அளவுக்கு ஐரோப்பிய நாகரிகத்தின் செழிப்பான அம்சங்கள் சோதனைக்கு உள்ளாகியுள்ளன.
Kaaba in Mecca’s Grand Mosque, on March 6, 2020.
இது போன்ற வைரஸ்கள் மனித குலத்தை தாக்கியது இதுதான் முதற் தடவை அல்ல. கடந்த நூற்றாண்டுகளில் ஐரோப்பாவை கொடிய நோய்கள் தாக்கி இருக்கின்றன. ஆசியாவையும் ஆபிரிக்காவையும் தாக்கி இருக்கின்றன. பிளேக் நோய் ஐரோப்பாவைத் தாக்கிய போது ஐரோப்பாவின் நகரங்களில் வசித்த மக்கள் கிராமங்களை நோக்கிச் சென்றார்கள். இவ்வாறு கிராமத்தை நோக்கிச் சென்ற நியூட்டன் எனப்படும் ஒர் இளைஞன் தனது கிராமத்து வீட்டில் அப்பிள் மரத்துக்கு கீழ் இருந்த போதே அவனுக்கு ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது என்ற கேள்வி எழுந்தது என்றும் அந்தக் கேள்வியின் விளைவே புவியீர்ப்பு விசைக் கோட்பாடு என்றும் கூறப்படுவதுண்டு.
TOKYO, JAPAN – FEBRUARY 26 2020
பிளேக் நோய்க்கு பின் கடந்த நூற்றாண்டில் 1918ஆம் ஆண்டு ஐரோப்பாவை தாக்கிய ஸ்பானிஷ் ஃப்ளு என்றழைக்கப்படும் ஒரு தொற்றுநோய் கிட்டத்தட்ட ஜந்து கோடி மக்களை கொன்றது. ஆனால் முதலாவது உலக மகா யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மொத்த மக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே அறுபது லட்சம்தான். இரண்டாம் உலக மகா யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட எட்டு கோடியே ஐம்பது லட்சம். அதாவது உலகப் பெருந்தொற்று நோய்கள் உலக மகா யுத்தங்களைப் போல அதிக தொகை பொதுமக்களை கொன்றிருக்கின்றன.
VENICE, ITALY – MARCH 9
மனித நாகரீகம் எனப்படுவது இயற்கையை மனிதன் வசப்படுத்தி சுரண்டுவதில் பெற்ற வெற்றிதான். ஆனால் அவ்வாறு இயற்கையைச் சுரண்டும் போது இயற்கையின் சமநிலை கெடுகிறது. அதன் விளைவாக ஏற்படும் இயற்கை அனர்த்தங்களும் உலகப் பெரும் தொற்றுநோய்களும் இன்று வரையிலும் மனிதனுக்கு சவாலாகவே காணப்படுகின்றன.
சீனா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக வளர்ந்து விட்டது. ஆனால் அதன் சில தலைநகரங்களில் சுவாசிப்பதற்கான காற்றை விலை கொடுத்து வாங்கும் ஒரு நிலை தோன்றியிருக்கிறது. இந்தியாவின் தலைநகரமாகிய புது தில்லியிலும் காற்றுக்கு விலை வந்துவிட்டது. ஏற்கனவே குடிக்கும் நீருக்கு விலை கொடுத்து வாங்கும் மனிதகுலம் இப்பொழுது காற்றுக்கும் விலை கொடுக்கத் தொடங்கிவிட்டது.
கொரோனா வைரஸ் தாக்கிய பொழுது பிரிக்கப்பட்ட குடும்பங்களின் துயரம் ஏறக்குறைய யுத்தங்களில் பிரிக்கப்பட்ட குடும்பங்களின் துயரங்களுக்கு ஈடானது. தனது வயதான பெற்றோர் அனாதைகள் போல அடக்கம் செய்யப்பட்டதாக ஒரு சீனர் கூறியிருக்கிறார். இது யுத்த காலங்களிலும் நடப்பதுண்டு. 1995இல் யாழ்ப்பாணத்தில் பேரிடப்பெயர்வின் போது இறந்துபோன முதியவர்களை அந்தந்த இடங்களிலேயே கை விட்டு சென்றதுண்டு. இறுதிக்கட்ட போரில் வன்னி கிழக்கில் காயப்பட்டவர்களையும் தப்பிச் செல்ல முடியாத முதியவர்களையும் குழந்தைகளையும் குற்றுயிராகக் கைவிட்டுச் சென்ற சம்பவங்கள் பல உண்டு. தன்னை மட்டும் காப்பாற்றினால் போதும் என்று தனியாளாகச் சிந்திக்கும் ஒரு நிலைக்கு மனிதர்கள் தள்ளப்படுவது என்பது மனித குல நாகரிகம் இதுவரை காலமும் அடைந்த உன்னதமான வளர்ச்சிகள் அனைத்துக்கும் எதிரானது.
ஆனால் இறுதிக்கட்ட ஈழப்போரில் போரில் தனித்துவிடப்பட்ட தமிழ் மக்களைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சில கட்டமைப்புகளை தவிர வேறு உதவி இருக்கவில்லை. முழு உலகமும் ஒரு சிறிய மக்கள் கூட்டத்துக்கு எதிராக திரண்டு நின்றது. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு சவப்பெட்டிகள் இருக்கவில்லை. காயங்கள் புழுத்தன. காகங்கள் பிணங்களைத் தின்றன. அது உலகின் மிகப் பெரிய பிண அறைகளில் ஒன்றாகக் காணப்பட்டது. உலகின் மிகப் பெரிய மரணச் சேரிகளில் ஒன்றாகக் காணப்பட்டது. யாரும் யாருக்கும் உதவியாக இருக்க முடியாத ஓர் ஊழிக் காலம் அது. தமிழ் மக்கள் தாம் முழு உலகத்தாலும் கைவிடப்பட்டதாக அப்பொழுது உணர்ந்தார்கள்.
ஆனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனர்களுக்கு நிலைமை அந்த அளவுக்கு மோசமாக இல்லை. சீன மரபு ஓவியங்களில் சித்திரிக்கப்படுவதை போல மிக அற்பமான மிகச்சிறிய மனிதன் கடந்த நூற்றாண்டு ஸ்பானிஷ் ஃப்ளு தாக்கிய பொழுது பெருமளவிற்கு தற்காப்பு இல்லாதவனாக காணப்பட்டான். ஆனால் இந்த நூற்றாண்டில் வைரஸ் தாக்கும் பொழுது அவனுடைய நிலைமை ஒப்பீட்டளவில் வளர்ந்திருக்கிறது.
இந்த நூற்றாண்டில் மனிதன் ஒரு “பூகோளப் பிராணி”. நல்லதும் பூகோள மயப்படுகிறது. கெட்டதும் பூகோள மயப்படுகிறது. நோய்களும் பூகோள மயப்படுகின்றன. அவை குறித்த அச்சங்களும் பூகோள மயப்படுகின்றன. அவை குறித்த வதந்திகளும் பூகோள மயப்படுகின்றன. அதேசமயம் அந்த நோய்களுக்கு எதிரான மானுட விழிப்பும் தடுப்பு நடவடிக்கைகளும் தற்காப்பு நடவடிக்கைகளும் பூகோள மயப்படுகின்றன.
ஐரோப்பாவின் பெரும்பாலான நகரங்களில் ஒரு யுத்த காலத்தை ஒத்த பதட்டம் காணப்படுவதாக நோர்வேயில் வசிக்கும் ஒரு தமிழர் கூறினார். யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல அங்கேயும் பல்பொருள் அங்காடிக்கு முன்னே மக்கள் குவிந்து நிற்கிறாரகள் என்று அவர் சொன்னார். பெல்ஜியத்தில் பல்பொருள் அங்காடிகளில் சவக்காரத் துண்டுக்காக அலைய வேண்டி இருப்பதாக ஒரு தமிழர் கூறினார்.
empty tram in downtown Milan, Italy, Wednesday, Feb. 26, 2020
யாழ்ப்பாணத்தில் ஒருபுறம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னே நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கிறார்கள். இன்னொருபுறம் பல்பொருள் அங்காடிகள் பிதுங்கி வழிகின்றன. எனது நண்பர் ஒருவர் பகிடியாகச் சொன்னார் “பெட்ரோல் இல்லை என்றால் சைக்கிள் ஓடலாம். சைக்கிள் இல்லையென்றால் நடந்து போகலாம். எனவே நடந்து போக தயாராக இருக்கும் ஒருவர் பெட்ரோல் இல்லை என்றால் என்ன நடக்குமென்று பீதி கொள்ள தேவையில்லை” என்று. அவருக்கு நான் ஒரு சீனப் பழமொழியைப் பதிலாக சொன்னேன் “பாயில் படுக்கிறவன் விழுவதில்லை” என்பதே அந்த பழமொழி.
நாங்கள் எளிமையாக வாழப் பழகினால் தெரிவுகளைக் குறைத்துக்கொண்டால் பதட்டமடைய தேவையில்லை. ஆனால் எங்களை அறியாமலே நாங்கள் எல்லோரும் ஒரு நுகர்வுப் பொறிக்குள் சிக்கி இருக்கிறோம். எங்களுடைய பதட்டமும் பதகளிப்பும் ஒருபுறம் மருத்துவ முதலாளிகளுக்கு லாபத்தை கொடுக்கின்றன. இன்னொருபுறம் பல்பொருள் அங்காடிகளின் முதலாளிகளுக்கு லாபத்தை கொடுக்கின்றன. யாழ்ப்பாணத்தில் பல்பொருள் அங்காடிகளில் பிதுங்கி வழியும் கூட்டத்துக்குள் பெருமளவுக்கு படித்த நடுத்தர வர்க்கத்தை காணமுடிந்தது. அவர்களில் அநேகர் வங்கி அட்டைகளை பயன்படுத்துபவர்கள்.படித்த நடுத்தர வர்க்கம் இவ்வாறு பதட்டம் அடையும் பொழுது ஏழையின் கதி என்ன? ஒரு நோயின் தாக்கத்தில் இருந்து தப்ப எவ்வளவு காலத்துக்கு உணவைச் சேமிக்கலாம்?
வைரசுக்கு மட்டும்தான் தமிழ் மக்கள் இவ்வாறு பதட்டமடைகிறார்கள் என்பதல்ல. இதற்கு முன்னரும் சில வாரங்களுக்கு முன்பு ஈரானிய தளபதியை அமெரிக்கா படுகொலை செய்த போது ஓர் உலகப் போர் மூளக்கூடும் என்ற அச்சம் நிலவியது. அதனால் அந்நாட்களிலும் யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னே நீண்ட வரிசை காத்திருந்தது. அந்தப் படங்களை எடுத்து அதே காலப்பகுதியில் அமெரிக்காவிலும் ஈரானிலும் எடுக்கப்பட்ட படங்களோடு ஒப்பிட்டு முகநூலில் சிலர் கிண்டலடித்து பதிவுகளை போட்டிருந்தார்கள்.தமிழ் மக்கள் அளவுக்கு மிஞ்சிப் பயப்படுகிறார்கள் என்று அவர்கள் நக்கலடித்து இருந்தார்கள்.அதேசமயம் அதிலொரு தற்காப்பு உணர்வும் உணர்வும் பூகோள அரசியல் மற்றும் புவிசார் அரசியல் குறித்த விழிப்பும் இருந்ததாக வேறு சிலர் சுட்டிக்காட்டினார்கள்.
தமிழ் மக்களுக்கு கொரோனா வைரஸ் கொண்டு வந்திருக்கும் பீதி உலகப் பொதுவானது. ஆனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பல்பொருள் அங்காடிகளிலும் மக்கள் முண்டியடித்துக்கொண்டு நிற்பதற்கு பின்னால் ஆழமான காரணங்கள் கூறப்படுகின்றன.
முதலாவது காரணம் யுத்த கால நினைவுகள். ஓர் ஊழியை அல்லது யுக முடிவைக் கடந்து வந்த மக்கள் இவர்கள். எனவே இன்னுமோர் ஊழியை எதிர்பார்த்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முற்படுகிறார்கள்.
இரண்டாவது காரணம் சேமிப்பு உணர்வு. நீண்ட எதிர்காலத்தை முன்னிட்டு சேமிக்கும் பழக்கம் உடைய மக்கள் என்பதனால் மற்றொரு ஊழி வரலாம் என்ற அச்சத்தில் பதறியடித்துக் கொண்டு பொருட்களைச் சேமிக்கிறார்கள். இது ஒரு பொது அலையாக மாறும்போது அந்த அலைக்குள் அள்ளுப்பட்டுப் போவது
மூன்றாவது காரணம் அரசியல் அறிவுடைய சிலர் கூறுவது. பூகோள அரசியலை குறித்தும் புவிசார் அரசியலைக் குறித்தும் நமது மக்களுக்கு மிகக் கொழுத்த அனுபவம் உண்டு. வெளியாருக்காக காத்திருக்கும் பல தசாப்த கால வரலாற்றைக் கொண்ட மக்கள் இவர்கள். எனவே வெளி அரசியலைக் குறித்த தெளிவு காரணமாக அவர்கள் இவ்வாறு சேமிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இதில் முதல் இரண்டு காரணங்களும் தான் ஓரளவுக்கு ஏற்புடையவை. சேமிப்பு பழக்கமும் ஒரு பொது அலைக்குள் அள்ளண்டு போவதுந்தான் முக்கியமான காரணங்கள். யுத்த கால நினைவுகள் சேமிப்பு பழக்கத்தை மேலும் பலப்படுத்தி இருக்கின்றன. பக்கத்து வீட்டில் இருப்பவர் சேமிக்கும் பொழுது ஒருவர் தூண்டபடுகிறார். அல்லது அவருக்கு தெரிந்தவர்கள் கைபேசியில் அழைத்து அவரை உஷார் படுத்துகிறார்கள் எனவே அவரும் பல்பொருள் அங்காடியை நோக்கி பறக்கிறார். இது ஒருவிதத்தில் ஊரோடு ஒத்தோடுதல். மற்றவர்கள் செய்வதை பார்த்துத் தானும் எடுபடுவது.
பொதுவாக பொதுப்புத்தி எனப்படுவது அப்படிப்பட்டதுதான். மற்றவர்கள் பெருமளவுக்கு செய்யும் ஒன்றை புத்தி பூர்வமாக விளங்கிக் கொள்ளாமல் தானும் அந்தப் பொது அலையில் அள்ளுண்டு போவது. இதுதான் தமிழ்பகுதிகளில் நடப்பது. ஒரு பொது ஆலைக்குள் அள்ளுண்டு போவது.
ஒரு வைரஸிடம் இருந்து தப்ப மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கை என்பதற்குமப்பால் தமிழ் அரசியலிலும் இப்பொதுப்புத்தி செல்வாக்கு செலுத்துகிறது. கடந்த பத்தாண்டுகளாகத் தமது தலைவர்களை தெரிவு செய்யும் பொழுது இப்பொதுப்புத்திதான் பெருமளவுக்கு தேர்தல் முடிவுகளை தீர்மானித்தது.மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக அதையே தானும் பின்பற்றுவது.
யூ-டியூப்பில் ஒரு வீடியோ உண்டு. அது இந்திய அரசியல் பற்றியது. அதில் கடைக்கு போய் காய்கறி வாங்கும்போது ஒவ்வொரு மரக்கறியாகப் பார்த்து பார்த்து வாங்கும் மக்கள் தலைவர்களைத் தெரிவு செய்யும்போது மட்டும் ஏன் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பதில்லை? என்று அந்த வீடியோ கேள்வி கேட்கிறது.
அதுதான் உண்மை. மரக்கறியை வாங்கும்பொழுது தேடித்தேடி நல்லதை பார்த்து வாங்குகிறோம். வேறு பொருட்களை நுகரும் போதும் தரமான உற்பத்தி எதுவென்று பார்த்து வாங்குகிறோம்.ஆனால் தேர்தலில் வாக்களிக்கும் பொழுது நமது தலைவர்கள் எப்படி அமைய வேண்டும் என்று எங்களிடம் ஏதாவது தர மதிப்பீடுகள் அதுதொடர்பான அளவுகோல்கள் இருக்கின்றனவா?
இதோ ஒரு தேர்தல் வரப்போகிறது. வைரஸ் தாக்கத்தால் அது சில சமயம் ஒத்தி வைக்கப்படலாம். ஆனால் அந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட போகும் தலைவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியலை தீர்மானிக்க போகிறார்கள். எனவே யாரை தங்களுடைய தலைவராக தெரிவு செய்ய வேண்டும் யாரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்பது குறித்து தமிழ் மக்களிடம் தெளிவான நிலைப்பாடுகள் உண்டா?
தமிழ் மக்கள் ஏற்கனவே ஒரு யுக முடிவைக் கடந்து வந்த மக்கள்.ஓர் ஊழிக்குள் தப்பிப் பிழைத்த மக்கள். எனவே இன்னுமொரு ஊழியை எதிர்பார்த்து பொருட்களை வாங்கிச் சேமிக்கும் ஒரு மக்கள் கூட்டம் விரைவில் தமது தலைவர்களை தெரிந்தெடுக்கும் போதும் அவ்வாறு முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்வார்களா ?