செய்வதாக ரஜினிகாந்த் உறுதியளித்தாக ஜமா-அத் உலமா சபையின் தலைவர் கே.எம்.பாகவி தெரிவித்துள்ளார்.
ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது வீட்டிற்குச் சென்று நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு உட்பட பல்வேறு கருத்துக்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இதுமட்டுமின்றி முஸ்லிம் மக்கள் சந்தித்துவரும் பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் ரஜினியிடம் எடுத்துரைத்தனர்.
இச்சந்திப்பு குறித்து ஜமாஅத் உலமா சபையின் தலைவர் கே.எம்.பாகவி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாம் இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எங்கள் கருத்துக்களை அவருடன் பகிர்ந்து கொண்டோம்.
குறித்த சட்டம் காரணமாக முஸ்லிம் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை ரஜினிகாந்திடம் விரிவாகக் கூறினோம். நாங்கள் கூறிய கருத்துக்களை அவர் புரிந்துகொண்டார். முஸ்லிம் மக்களின் அச்சத்தைப்போக்க என்ன தேவையோ அதனைச் செய்வதாக அவர் உறுதியளித்தார்’’ என்று குறிப்பிட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி கலவரம் குறித்து தனது பலத்த கண்டனத்தை தெரிவித்திருந்தார். டெல்லி கலவரம் உளவுத்துறை தோல்வி என்றும் எனவே அது உட்துறை அமைச்சகத்தின் தோல்விதான் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள் எனவும் இல்லாவிட்டால் இராஜினாமா செய்துவிட்டுச் செல்லுங்கள் என்றும் ரஜினி பேசியிருந்தார்.
இதுதவிர இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் தங்களுக்கு புரிதல் வேண்டும் என எழுதிய இஸ்லாமிய அமைப்பின் தலைவரை அழைத்து நாம் நேரில் பேசுவோம் என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை போயஸ் இல்லத்தில் ஹஜ் அசோசியேஷன் தலைவர் முகமது அபூபக்கர் நேற்று சந்தித்து பேசியமை குறிப்பிடத்தக்கது.