பெரும்பாலானவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருப்பதாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் சுகாதார பிரிவு மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இதற்கு உடனடியாக தீர்வுகாணும் வகையிலும் பெருந்தோட்டப்பகுதிகளில் சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனையின் பிரகாரம் விசேட பொறிமுறையொன்றை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் உருவாக்கியுள்ளது.
இதன்படி இரும்புச்சத்து அதிகம் அடங்கிய ‘சோயா மீட்டை’ அறிமுகப்படுத்தி அதனை பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள மக்களுக்கு குறைந்த விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்காக ‘சிலோன் பிஸ்கட் லிமிடட்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.
இத்திட்டம் தொடர்பாக நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமிதெரிவித்துள்ளதாவது, “பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவராக பதவியேற்கும்போது, மலையகத்தில் சுகாதாரத்துறையை மேம்படுத்த வேண்டும் என்பதே எனது பிரதான இலக்காக இருந்தது. இதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்குமாறு ஆறுமுகன் தொண்டமானும் அனுமதி வழங்கினார்.
அவரின் வழிகாட்டலில் எமது நிதியத்தின் சுகாதாரப்பிரிவு பெருந்தோட்டப்பகுதிகளுக்கு சென்று ஆய்வுகளை நடத்தியது. இதன்போது பெரும்பாலானவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
இதற்கு எவ்வாறு தீர்வு காணலாம், இரும்புச்சத்தை மக்களுக்கு வழங்குவது எப்படி என்றெல்லாம் கலந்துரையாடப்பட்டது. ஆரம்பத்தில் இரும்புச்சத்து அடங்கிய மாத்திரைகளை வழங்கலாம் என கூறப்பட்டது.
எனினும், புறத்தாக்கங்களை கருத்திற்கொண்டு, உணவுமூலம் இரும்புச்சத்தை வழங்குவதே சிறப்பு என முடிவெடுக்கப்பட்டது.
இதற்காக இயற்கையான முறையில் அதிக இரும்புச்சத்து அடங்கிய சோயா மீட்டை தயாரித்து, அதனை குறைந்த விலையில் எமது மக்களுக்கு வழங்குவதற்கு பெருந்தோட்ட நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியது.
சிலோன் பிஸ்கட் லிமிடட்டுடன் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதன்படி இன்னும் மூன்று வாரங்களுக்குள் சோயாமீட் சந்தைக்கு வரும்.
பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள மக்களுக்கு கூட்டுறவு நிலையங்கள் ஊடாக 30 ரூபாவுக்கே அது வழங்கப்படும். இதனை மேலும் குறைக்க முடியுமாக இருந்தால் அதனையும் நிச்சயம் செய்வோம்.
சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார் உட்பட இரும்புச்சத்து குறைபாடு உள்ளோர் இதன்மூலம் பயன்பெறலாம்.
அதேவேளை பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் அபிவிருத்தி செய்யப்படும். ஈ – புத்தகம் நிலையம் உருவாக்கும் திட்டமும் இருக்கின்றது.
அத்துடன், பெருந்தோட்டப்பகுதிகள் மற்றும் அதனை அண்டியுள்ள கிராமங்களில் கூட்டுறவு நிலையங்களில் பொருட்களை வாங்கும் முறையை ஊக்குவிக்க வேண்டும்.
அதன்மூலம் எமது மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். சோயா மீட்டைகூட அதன் ஊடாக வழங்கவே உத்தேசிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.