LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, March 25, 2020

கொரோனா: ராஜபக்சக்களுக்கு விழுந்த லொத்தர்?

சீனா-கொரோனாவை வெற்றி கொண்ட இலத்திரனியல் பதாதைகள்
தேர்தல் ஆணையாளர் தேர்தல் திகதியை பிற்போட்டிருக்கிறார். இயற்கை அனர்த்தச் சூழல், அசாதாரண நிலைமை, அவசரகால நிலைமை போன்றவற்றைக் காட்டித் தேர்தல் திகதியை மேலும் பிற்போடலாம். ஆனால் அரசாங்கம் அந்தத் திகதியை அதிக காலம் பிற்போட விரும்பாது. கொரோனா வைரஸை எவ்வளவு கெதியாகக் கட்டுப்படுத்த முடியுமோ அவ்வளவு கெதியாகக் கட்டுப்படுத்தவே அரசாங்கம் முயலும். எனவே கொரோனாவை எவ்வளவு கெதியாகக் கட்டுப்படுத்தலாம் என்பதுதான் தேர்தலை எப்பொழுது நடத்தலாம் என்பதைத் தீர்மானிக்கும்.

ராஜபக்சக்கள் ராணுவக் கரம் கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்துவார்கள். ஏற்கனவே யுத்தத்தை வெற்றி கொண்டது போல அவர்கள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் ஏறக்குறைய ஒரு யுத்த நடவடிக்கை போல முன்னெடுக்க தேவையான முன் அனுபவமும் ராணுவப் பண்பும் அவர்களிடம் உண்டு.

“எதேச்சாதிகார அரசுகளுக்கு கொரோனா வைரஸ் ஒரு சுவர்க்கம்” என்று மொஸ்கோவில் உள்ள ஒரு மேற்கத்தைய ராஜதந்திரி கூறியிருக்கிறார். முன்பு ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகிய உக்ரேனின் அதிபர் செலென்ஸ்கி பின்வருமாறு கூறியிருக்கிறார் “ஏனைய நாடுகளின் அனுபவம் எதைக் காட்டுகிறது என்றால் மென்மையும் சுதந்திரமும் கொராணா வைரஸின் நண்பர்கள் என்பதைத்தான். எனவே உக்ரேனியர்களின் உயிருக்கும் ஆரோக்கியத்துக்குமாக நாங்கள் கடுமையான உடனடியான பெரும்பாலும் அபகீர்த்தி குரிய நடவடிக்கைகளை எடுப்போம்.”

மேற்படி கூற்றுக்கள் ராஜபக்ச ஆட்சிக்கும் பொருந்தும். எப்படி அவர்கள் யுத்தத்தை வெற்றி கொண்டார்களோ அப்படியே கொரோனா வைரசையும் வெற்றிகொள்ளப் பார்ப்பார்கள். “பயங்கரவாதத்தின் மூலம் நாடு முழுவதையும் நிர்மூலமாக்கத் தயாரான தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக் கொரோனா வைரஸ் சவால் அல்ல. அது இங்கு ஆட்கொண்டால் முற்றாக இல்லாதொழிப்போம்.” என்று கூறியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல.

புலிகள் இயக்கமும் கொரோனா வைரசும் ஒன்றல்ல என்பது வேறு விடயம். ஆனால் கொரோனா வைரசை வெற்றி கொள்வது என்பது ராஜபக்சகளைப் பொறுத்தவரை தேர்தல் வெற்றிகளோடு தொடர்புடையது. இந்த வைரசை மிக விரைவாக அதிக சேதம் இன்றி வெற்றி கொள்வார்களாக இருந்தால் அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்களுக்கு அதைவிடச் சிறந்த பிரச்சாரம் இருக்காது.


வைரஸ் பரவத் தொடங்கிய புதிதில் அது அரசாங்கத்துக்கு ஒரு தடையாகத்தான் காணப்பட்டது. ஏனெனில் ஜெனிவாக் கூட்டத் தொடரை முன்வைத்து ஓர் இன அலையை தோற்றுவித்து அதன்மூலம் அமோக வெற்றியைப் பெற அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். ஜெனிவா தீர்மானத்தை எதிர்ப்பது, ராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிரான அமெரிக்க பயண தடையை எதிர்ப்பது போன்றவற்றின் மூலம் அவர்கள் இன அலை ஒன்றை இலகுவாகத் உற்பத்தி செய்திருக்கலாம். ஆனால் கொரோனா வைரஸின் வருகை அந்த நிகழ்ச்சி நிரலை குழப்பி விட்டது. எனவேதான் வைரஸ் பரவுகிறதோ இல்லையோ அதுவரை பார்த்துக் கொண்டிருக்காமல் ஜெனிவாச் சூட்டோடு தேர்தலை வைத்துவிட அவர்கள் விரும்பினார்கள். அவ்வாறு அவர்கள் விரும்பியதற்கு முக்கியமான காரணம் எதிர்க்கட்சி பலமாக இல்லை என்பது.

யூ.என்.பி இப்பொழுதும் உடைந்து போயுள்ளது. கட்சிக்குள் தலைமைத்துவ போட்டி முடிவுக்கு வரவில்லை. எனவே ஒரு தேர்தலை எதிர்கொண்டு ராஜபக்ஷக்களுக்கு பலமான எதிர்ப்பை காட்ட அக்கட்சியால் இப்பொழுது முடியாது. இது ராஜபக்ஷக்களுக்கு சாதகமான ஓர் அம்சம். கொரோனாவை முன்வைத்து தேர்தலை ஒத்தி வைத்தால் நிலைமைகள் ஒப்பீட்டளவில் மாறக்கூடும். புதிய நிலைமைகளுக்கு ஏற்ப யு.என்.பி தன்னை பலப்படுத்திக் கொள்ளுமாக இருந்தால் அது ராஜபக்ஷக்களுக்கு சவாலாக அமையலாம். எனவே ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியின் அலை தொடர்ந்து வீசும் ஒரு காலகட்டத்தில் தேர்தலை வைப்பதே நல்லது. அதனால் தான் அரசாங்கம் தேர்தலை ஒத்தி வைக்க விரும்பவில்லை. எனவே யு.என்.பி தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கு இடையில் தேர்தலை வைப்பதற்கே அரசாங்கம் விரும்பியது. ஆனால் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தேர்தல் திகதியைப் பின் தள்ளி விட்டது.

இனி அரசாங்கம் ஒரு யுத்தத்தை தொடங்க வேண்டும். அந்த யுத்தத்தில் அவர்கள் வென்று காட்ட வேண்டும். அந்த வெற்றி ஒன்றே அவர்களுக்கு போதும். தேர்தலில் கொத்தாக வாக்குகளை அள்ளலாம். எனவே இப்பொழுது உடனடியாக கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை அவர்கள் தொடங்க வேண்டும். அதேநேரம் இப்போதுள்ள அசாதாரண சூழலை சாட்டாக வைத்து சாதாரண சிங்கள வாக்காளர்களை கவரும் விதத்தில் சலுகைகளையும் அறிவிக்கலாம். அப்படிப்பட்ட சலுகைகள் சிலவற்றை ஏற்கனவே அரசாங்கம் அறிவித்து விட்டது. பருப்புக்கும் மீன் ரின்னுக்கும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இவை சாதாரண ஜனங்களின் சாப்பாடுகள்.இந்த சலுகையானது சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் எடுபடும். இவ்வாறான சலுகைகளை அறிவித்து விட்டு ராஜபக்சக்கள் கொரோனா வைரசை எதிர்கொள்வார்கள்,



ஒரு சிவில் தன்மைமிக்க அரசு அரசாங்கம் இதுபோன்ற நெருக்கடிகளை கையாள்வதற்கும் ஒரு ராணுவ தனம் மிக்க அரசாங்கம் கையாள்வதற்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. ஒரு ராணுவப் பண்பு அதிகம் உடைய அரசாங்கம் அதிலும் குறிப்பாக படைத்தரப்புடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருக்கும் ஓர் அரசாங்கம் இது போன்ற நிலைமைகளை விரைந்து கையாள முடியும். “நாய் பிடிப்பது போல நோய்த் தொற்றுள்ளவர்களைத் துரத்திப் பிடிக்க ஓர் அரசாங்கம் துணிந்தால் இலகுவாகக் கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்” என்று ஒரு புலம் பெயர்ந்து வாழும் தமிழர் சொன்னார். இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட மேற்கத்தைய ராஜதந்திரியும் உக்ரேனின் ஜனாதிபதியும் சொல்ல வந்ததும் அதைத்தான்.

ராணுவப் பண்பு அதிகம் உடைய ஓர் அரசாங்கம் பெரும் தொற்று நோய்களையும் இயற்கைப் பேரழிவுகளையும் துணிச்சலாக எதிர்கொள்ளும். கிட்டத்தட்ட ஒரு யுத்தத்தை எதிர்கொள்வது போல அவர்கள் அந்த அசாதாரண சூழலை எதிர்கொள்வார்கள். சீனா அப்படித்தான் எதிர்கொண்டது. ஒருபுறம் சீனா துணிச்சலான முடிவுகளை எடுத்தது. இன்னொருபுறம் வரையறையின்றி காசை கொட்டியது. இதன் மூலம் நோய் பரவும் வேகத்தை அது கட்டுப்படுத்தியது.

சிங்கப்பூரும் அப்படிதான் நிலைமைகளைக் கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தது. 2003 இலிருந்து சார்ஸ் என்று அழைக்கப்படும் வைரஸ் சிங்கப்பூர் குடிமக்களை தாக்கியது. அதில் கிட்டத்தட்ட 33 பேர் கொல்லப்பட்டார்கள். சார்ஸ் வைரஸின் அடுத்த கட்டக் கூர்ப்பே கொரோனா என்று கூறப்படகிறது. சார்ஸ் வைரஸை வெற்றி கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் சிங்கப்பூர் கொரோனா வைரசையும் ஒப்பீட்டளவில் விரைவாக கட்டுப்படுத்தியிருக்கிறது.

கிட்டத்தட்ட வடகொரியாவும் அப்படித்தான் நிலைமைகளை கையாண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மாறாக தென் கொரியா அவ்வாறு கையாளத் தவறியதன் விளைவாக அங்கே நோய்த்தொற்று அதிகமாகியது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இப்பொழுது ராஜபக்சக்களும் அதைத்தான் செய்யப் போகிறார்கள். இலங்கை ஒரு தீவாக இருப்பது அவர்களுக்கு அனுகூலமானது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு பொறுப்பாக இராணுவத் தளபதி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் கொரானாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகம் ராணுவத் தன்மை மிக்கதாக அவர்கள் வடிவமைக்க கூடும். ஏற்கனவே நோய்த் தொற்று உடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களுக்கான தனிமைப்படுத்தல் முகாம்களை குறிப்பாக தமிழ் பகுதிகளில் பெருமளவுக்கு படைத்தரப்பே கையாண்டு வருகிறது. கிட்டத்தட்ட 24 தனிமைப்படுத்தல் முகாம்கள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் ஆறு முகாம்கள் தமிழ் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. அவையாவும் படைத்தரப்பின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. இவ்வாறான நடவடிக்கைகளின் முடிவில் ஒரு கட்டத்தில் கொரோனா வைரசை அரசாங்கம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தும் போது புகழனைத்தும் படைத்தரப்புக்கே சேரும். அதோடு ராஜபக்சக்களுக்கும் சேரும்.


தனிமைப்படுத்தல் நிலையம் -இரணைமடு
எனவே ராஜபக்சக்கள் வைரசுக்கு எதிரான யுத்தத்தை ஒரு தேர்தல் பிரச்சாரமாக எடுத்துக் கொண்டு எதிர்கொள்வார்கள். இந்த யுத்தத்தில் அவர்கள் வெற்றி பெற்றால் அடுத்து வரும் எல்லா தேர்தல்களிலும் அந்த வெற்றியின் அலை வீசும். எனவே அவர்கள் இந்த யுத்தத்தை எப்படியும் வெல்லப் பார்ப்பார்கள். தேர்தல் பிரச்சாரத்துக்கு திறை சேரியிலிருந்து காசை எடுக்க முடியாது. அதை அவர்கள் தங்களுடைய கட்சி நிதியிலிருந்தோ சொந்தச் சேகரிப்பில் இருந்தோ தான் எடுக்க வேண்டும். ஆனால் கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தை அரச பணத்திலேயே நடத்தலாம்.அரச வளங்களை கொட்டி அதைச் செய்யலாம். அக்காலகட்டத்தில் வழங்கப்படும் சலுகைகளுக்கான நிதியையும் திறை சேரியிலிருந்து எடுக்கலாம்.அதாவது அரச செலவிலேயே ஒரு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கலாம். அப்படிப்பார்த்தால் கொரோனா வைரஸ் ராஜபக்ஷக்களுக்கு நன்மையைக் கொண்டு வந்திருக்கிறதா?

சரியாக ஓராண்டுக்கு முன் இதே காலப்பகுதியில் ஈஸ்டர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது அதன் விளைவுகளை ராஜபக்சக்கள் வாக்குகளாக திரட்டி கொண்டார்கள். இப்பொழுது கொரோனா வைரஸ் கொண்டு வந்திருக்கும் சவால்களையும் அதன் விளைவுகளையும் ராஜபக்சக்கள் வாக்குகளாக திரட்ட போகிறார்களா? அதாவது முழு நாட்டுக்கும் தீங்காக காணப்படும் அம்சங்கள் ராஜபக்ச குடும்பத்திற்கு நன்மைகளாக முடிகின்றனவா?

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7