இந்நிலையில நேற்று 9 ஆக இருந்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதுடன் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்கள் அதிகம் பாதிப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கொரோனா சோதனைக்கு தனியார் மருத்துவமனைகளிடம் பேசியதாகத் தெரிவித்த அவர், ஏழை மக்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அதற்கு அவர்கள் ஒத்துழைப்புத் தருவதாக தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாகப் பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட வேண்டிய மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் வரும் 31ஆம் திகதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விடுத்துள்ள நிலையில் அத்தியவசியத் துறைகள் தவிர்த்து ஏனைய அலுவலங்கள் இயங்காது எனவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.