கட்டமைப்பினை உருவாக்கி நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கு கொள்கையை வகுக்கத் தயாராகவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்த பலமான எதிர்க் கட்சியாக தம்மை உருவாக்க மக்களின் ஆதரவைக் கேட்டுநிற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“இம்முறை தேர்தலில் சகல மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி போட்டியிடும். இந்தத் தேர்தலில் எமக்கு இலக்கும் நோக்கமும் உள்ளது. இந்த ஆட்சியும் இதற்கு முன்னர் முன்னெடுத்த ஆட்சியும் தம்மால் நாட்டினை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது என்பதை நிரூபித்துள்ளனர்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போதும் இதற்கு முன்னரும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு பல வாக்குறுதிகளைக் கொடுத்தனர். எனினும் இந்தக் காலத்தில் நாட்டின் பொருளாதாரக் கொள்கையும், மக்களின் சமூகத் தன்மைக்கும் அமைய இனியும் இந்த ஆட்சியாளர்களுடன் முன்னோக்கிச் செல்லமுடியாது என்பது தெரிந்துவிட்டது.
ஆகவே, இந்த நாட்டின் ஆரோக்கியமான சமூகமொன்றையும், பலமான பொருளாதாரக் கொள்கையையும் புதிய சமூகக் கட்டமைப்பு ஒன்றினையும் உருவாக்குவது குறித்து தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க நாம் தயாராக உள்ளோம்.
அதேபோல், நாடாளுமன்றத்தில் பலமான எதிர்க்கட்சி ஒன்று அவசியமாகின்றது. அதற்கான பலமான அணியொன்றை எமக்கு வழங்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுக்கிறோம்” என்று கூறியுள்ளார்.