பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவால் வாக்குமூலம் அளிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக சமூகமளிக்குமாறு பயங்கரவாத விசாரணைப்பிரிவால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பத்திரிகை நிறுவனப் பணிப்பாளர் சக்திவேல்பிள்ளை பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடர் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் ஜக்கிய நாடுகள் பொது மன்னிப்புச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி ஒன்று எமது பத்திரிகையில் வெளியிட்டுள்ளதாக எமது நிறுவனத்தின் பணிப்பாளர் என்ற வகையில் வாக்கு மூலம் பெற்றுக்கொள்வதற்கு எனக்கு பயங்கரவாத விசாரணைப்பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், விசாரணக்கு எனது மனைவியையும் அழைத்துக்கொண்டு வருமாறு பயங்கரவாத விசாரணைப்பிரிவினால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. எனது பத்திரிகை நிறுவனம் தொடர்பாக எனது மனைவி எவ்விதத்திலும் தொடர்பினை வைத்திருக்கவில்லை.
எனது பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளர் என்ற வகையில் எனக்கும், ஆசிரியராக கடமையாற்றும் க.சசிதரனுக்கு எதிர்வரும் 3ஆம் திகதியும் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக சமூகமளிக்குமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எமது பத்திரிகை ஆசிரியர் பீடத்தை இலக்கு வைக்கப்பட்டு பல விசாரணைகள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளது. இந்நாட்டில் சுதந்திரமான ஊடகங்கள் தமது பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்பதை இந்நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.