இதுவரை மூவாயிரத்து 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 92 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சீனாவில் நேற்று வரையில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2 ஆயிரத்து 981 ஆக உயர்வடைந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் சீனாவில் உயிரிழந்த 38 பேரில் 37 பேர் கொரோனாவின் மையமான ஹூபே மாகாணத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் மாத்திரம் சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் கொரோனா தொற்றுக்குள்ளான 119 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் 115 பேர் ஹூபேயைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் இதுவரை 80 ஆயிரத்து 270 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
49 ஆயிரத்து 856 நோயாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், அமெரிக்காவில் இதுவரையில் 28 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ஐரோப்பிய நாடுகளில் இதுவரையில் கொரோனா தொற்று காரணமாக இரண்டாயிரத்து 502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், ஸ்பெய்னிலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சளி தொல்லையால் அவதிப்படுவதால் முதன்முறையாக ஞாயிறு பிரார்த்தனையில் கலந்து கொள்ளப்போவதில்லையென பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்திருந்தார்.
இத்தாலியில் கொரொனா தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், அவரின் இந்நிலைமை குறித்து பலரும் அச்சமடைந்துள்ளனர்.
இதனையடுத்து பாப்பரசர் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இப்பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாடசாலைகளுக்கு நான்கு வாரங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.