கொரோனா பாதித்தவர்கள் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையும் 14 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் சென்று திரும்பிய 43 வயது ஆணுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே கொரோனா பாதித்த நோயாளியுடன் பணிபுரிந்த, திருவண்ணாமலையை சேர்ந்த 28 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல, டெல்லி சென்று திரும்பிய விழுப்புரத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி சென்று திரும்பிய மதுரையை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வரும் 7 பேரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது. புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்ட ஏழு பேருடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை, மதுரை, திருநெல்வேலி, வேலூர், இராணிப்பேட்டை, சேலம், விருதுநகர், ஈரோடு, அரியலூர், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இருந்தனர்.
இந்த பட்டியலில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் புதிதாக இணைந்துள்ளன.