மேற்கிந்திய தீவுக்கு சென்று விட்டு, அண்மையில் தமிழகம் திரும்பிய கும்பகோணத்தை சேர்ந்த 42 வயது நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
தற்போது, இவர், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தனிமை வார்டில் தங்க வைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
லண்டனில் இருந்து அண்மையில் திரும்பிய 49 வயது காட்பாடியை சேர்ந்த நபர், கொரோனா அறிகுறியுடன் வேலூர் – சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
60 வயது முதியவர் ஒருவர், கொரோனா அறிகுறியுடன் மதுரை – ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார். வி
ருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த இவர், வெளிநாட்டினருடன் அடிக்கடி, தொழில் நிமித்தமான கலந்துரையாடல் – சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் என தெரிய வந்துள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது இளைஞர், கொரோனா அறிகுறியுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா அறிகுறி உறுதியானதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக அரசு தந்துள்ள விவரங்களின்படி, மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 13 ஆயிரத்து 323 படுக்கைகள் உள்ளன.
இதேபோல, சுவாச உதவிக் கருவியான வென்டிலேட்டர்கள் 3 ஆயிரத்து 44 உள்ளன.
கொரோனா பாதித்தவர்கள், அறிகுறி உள்ளவர்கள் என தற்போது 277 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.