போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்டச் செயலாளரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான சந்திரஸ்ரீ பண்டார தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று (வியாழக்கிழமை) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவுபெற்றது. புத்தளம் மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளும், 20 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுவதற்காக தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தன.
இதில் ஸ்ரீலங்கா பிரகிதி சீலி அரசியல் கட்சியினதும், ஒரு சுயேட்சைக் குழுவினதும் வேட்புமனு உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாமையினால் நிராகரிக்கப்பட்டதாக சந்திரஸ்ரீ பண்டார கூறினார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தலைமையிலான குழுவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா தலைமையிலான குழுவும், எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேராவும் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து புத்தளத்தில் தராசு சின்னத்தில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு கட்சி சார்பில் கூட்டணியாக களமிறங்கவுள்ள நிலையில், அந்தக் கட்சியும் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தது.
இதேவேளை, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான இறுதித் தினமான இன்று புத்தளம் மாவட்டச் செயலகம் மற்றும் புத்தளம் நகரம் முழுதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், பொலிஸாரும், விஷேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.