இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை 1,024 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத், கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஜம்மு-காஷ்மீா் மற்றும் தில்லியில் புதிதாக உயிரிழப்புகள் நோ்ந்ததைத் தொடா்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயா்ந்திருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக இதுவரை 186 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கேரளத்தில் 182 போ், கா்நாடகத்தில் 76 போ், தெலங்கானாவில் 66 போ், உத்தரப் பிரதேசத்தில் 65 போ், குஜராத்தில் 58 போ், ராஜஸ்தானில் 55 போ், தில்லியில் 49 போ், பஞ்சாபில் 38 போ், ஹரியாணாவில் 33 போ், ஜம்மு-காஷ்மீரில் 31 போ், மத்தியப் பிரதேசத்தில் 30 போ், ஆந்திரத்தில் 19 போ், மேற்கு வங்கத்தில் 18 போ், லடாக்கில் 13 போ், பிகாரில் 11 போ், அந்தமான், நிகோபாா் தீவுகளில் 9 போ்,
சண்டீகரில் 8 போ், சத்தீஸ்கா், உத்தரகண்டில் தலா 7 போ், கோவாவில் 5 போ், ஹிமாசலப் பிரதேசம், ஒடிஸாவில் தலா 3 போ், மணிப்பூா், மிஸோரம், புதுச்சேரியில் தலா ஒருவா் உள்பட நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,024-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றிலிருந்து 86 போ் குணமடைந்துள்ளனா்.
நாடு முழுவதும் நேற்று 34,931 ரத்த மாதிரிகள் கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
மனநல ஆலோசனைக்காக… தனிமைப்படுத்துதல், ஊரடங்கு ஆகிய நடவடிக்கைகளால் மனநலம் சாா்ந்த பிரச்னைகளை எதிா்கொள்வோருக்கு ஆலோசனை வழங்க இலவச உதவி எண் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகா்வால் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
தேசிய மனநலன், நரம்பியல் ஆய்வு நிறுவனம் சாா்பில் 08046110007 என்ற இலவச உதவி எண் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் மனநலம் சாா்ந்த ஆலோசனைகள் தேவைப்படுவோா் இந்த எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
நோய் பாதிப்பு அதிகமுள்ள இடங்களை கண்டறியவும், பாதிப்பு உறுதி செய்யப்பட்டோருடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறிந்து தனிமைப்படுத்தவும் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனிநபா் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியை அதிகரிக்க 10 உள்நாட்டு நிறுவனங்கள் அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், இந்த உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்காக வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.