நடந்த கலவரத்தில் 122 வீடுகள், 301 வாகனங்கள் கலவரக்காரர்களால் எரிக்கப்பட்டதாக இடைக்கால அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியில் நடந்த போராட்டங்கள் காரணமாக கடந்த மாதம் 23, 24, 25 ஆம் திகதிகளில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில் 46 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
கலவரத்தில் பலியானவர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து டெல்லி கலவரத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசுத்துறை சார்பிலும், தனியார்துறை சார்பிலும் சேதம் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் முதல் இடைக்கால சேத விபர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், டெல்லி வட.கிழக்கு பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் 122 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அந்த 122 வீடுகளும் முழுமையாக எரிந்து நாசமாகிவிட்டன. 322 கடைகள் தீ வைத்தும், அடித்து நொறுக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
மொத்தம் 301 வாகனங்கள் கலவரக்காரர்களால் எரிக்கப்பட்டன. தொடர்ந்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட வீடுகள், வாகனங்கள் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 18 குழுக்கள் ஆய்வு செய்து இந்த இடைக்கால சேத விபரங்களை தந்துள்ளன. தனியார் குழுக்களின் சேத மதிப்பீடு இன்னும் முடிவடையவில்லை. இந்த வார இறுதிக்குள் சேத மதிப்பீடு முழுவதும் நிறைவு பெற்று விடும்.
கலவரம் தொடர்பாக 369 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில்1,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தேடப்பட்டு வருகிறார்கள்.
முதல் கட்ட ஆய்வுப்படி யமுனா விகார், முஸ்லதாபா பாத், சந்த்பாக், கோகல்புரி, பிரிஜ்புரி, பாகீரதி விகார் ஆகிய பகுதிகளில்தான் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணைநிலை இராணுவம் கண்காணிப்பு காரணமாக அமைதி திரும்பி உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.