சொத்துக்கள் சேர்க்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வைத்தியர் மொஹமட் ஷாபி சிஹாப்தீனின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி கமெராவில் பதிவான காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதாக குற்றவியல் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எனவே அழிக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் இருந்து அறிக்கையொன்றைப் பெறுமாறு, குருநாகல் நீதவான் சம்பத் ஹேவாவசம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.
மொஹமட் ஷாபி சிஹாப்தீனின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி கமெராக்கள், கடந்த மாதம் 20 ஆம் திகதி சி.ஐ.டி.யிடம் அவரினால் ஒப்படைக்கப்பட்டதாகவும் இதன்போது கண்காணிப்பு கமராவில் காட்சிகள் இல்லையென்றும் அதை வைத்தியர் அழித்தாரா அல்லது குற்றப் புலனாய்வு பிரிவினர் அழித்தனரா என்பதை கண்டறிய வேண்டுமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்தே மேலதிக விசாரணைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்புமாறு குற்றவியல் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.
குறித்த கோரிக்கைக்கு அமையவே அழிக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் இருந்து அறிக்கையொன்றைப் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.