தேடப்பட்டு வரும் நித்யானந்தா ஆன்மீக சுற்றுலாவில் இருக்கிறார் என்று கர்நாடக பொலிஸார் உச்ச நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பிச் சென்று கைலாசா என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. அந்த நாட்டில் குடியுரிமை கேட்டு 40 இலட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா காணொளி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தலைமறைவாக உள்ள அவரை கண்டுபிடிக்க சர்வதேச பொலிஸாரின் இன்டர்போல் உதவியுடன் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே நித்யானந்தா மீதான பாலியல் வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட பிணை மனுவை இரத்து செய்யக்கோரி நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் தாக்கல் செய்த வழக்கு பெங்ளூர் உச்ச நீதிமன்றில் நீதிபதி குன்ஹா அமர்வு முன்பாக கடந்த 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நித்யானந்தாவை நேரில் சந்தித்து அவரை றீதிமன்றில் ஆஜராக கோரும் சம்மனை அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதுகுறித்த அறிக்கையை 3ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நேற்று கர்நாடக உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போது வழக்கின் விசாரணை அதிகாரியான துணை பொலிஸ் ஆணையாளர் பால்ராஜ் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், ‘நித்யானந்தா ஆன்மீக சுற்றுலாவில் இருப்பதால் பெங்ளூர் பிடதி ஆசிரமத்தில் அவர் இல்லை. இதனால் அவரது உதவியாளரான குமாரி அர்ச்சனா நந்தாவிடம் அழைப்பாணை வழங்கப்பட்டது’ என்று கூறப்பட்டு இருந்தது.
அதேபோல குமாரி அர்ச்சனானந்தா தரப்பிலும் பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நித்யானந்தா இருக்குமிடம் எனக்குத் தெரியாது என்பதால், அழைப்பாணையை அவரிடம் அளிக்க முடியாது என கூறியும், பொலிஸார் அழைப்பாணையை வாங்கிக்கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்தினர்’ என குறிப்பிட்டிருந்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டநீதிமன்றம் வழக்கை நாளை (புதன்கிழமை) வரை ஒத்திவைத்தது.