வைரஸ் தொற்று தொடர்பான பயத்தை அமெரிக்கா பரப்புகிறதே தவிர, அவ்வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை வழங்கவில்லை என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், உலக நாடுகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இதில் முதல் கட்டமாக, சீனாவிற்குள் நுழையவோ, சீனர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழையவோ தடை விதிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பயத்தை அமெரிக்கா பரப்புகிறது என சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதியவகை வைரஸான கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சீனாவின் நடவடிக்கையை பெரும்பாலான நாடுகள் பாராட்டியுள்ளன.
சீனக் குடிமக்களை அவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு அவர்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அந்த முடிவுக்கு மதிப்பளிக்கிறோம்.
ஆனால், கொரோனா வைரஸ் தொடர்பான பயத்தை அமெரிக்கா பரப்புகிறதே தவிர, அவ்வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை எங்களுக்கு அளிப்பதில் தோற்றுவிட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்களை காவுக் கொண்டுவரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 360பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு 17 ஆயிரத்து 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 478 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.