ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சியை விமர்சித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தால் நாட்டிற்கு நன்மைபயக்கும் வகையிலான செயற்பாடுகள் எதனையும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பாரிய பொருளாதார நெருக்கடியின் மத்தியிலே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. இருந்தபோதும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஆட்சியை கைப்பற்றி நூறு நாட்களுக்குள் நிறைவேற்றியிருந்தோம்.
இரு மாதத்திற்குள் தேசிய வருமானத்தையும் 90 வீதமாக வளர்ச்சியடையச் செய்திருந்தோம். இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு சிறந்த நிதிமுகாமைத்துவத்தை நாங்கள் மேற்கொண்டு வருவதாக ஏசியா பசுபிக் வங்கி எமக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது.
எமது ஆட்சிகாலத்தில் மக்களின் வாழ்வாதார செலவுகளை குறைப்பதற்காக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் இந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக தெரியவில்லை.
நிரைகுறை பிரேரணைக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை அதனாலேயே வாழ்வாதார செலவுகளை குறைக்கமுடியாது இருப்பதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. நாங்கள் ஒரு போதும் அவ்வாறு செய்யவில்லை. மக்களுக்கான சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலதிகமாக கடன்களை பெறவேண்டாம் என்றே தெரிவித்தோம்.
தற்போதைய அரசாங்கம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக தெரியவில்லை. அவர்கள் எதிர்கட்சியை விமர்சிப்பதனூடாக திருப்திகண்டு வருகின்றனர். இவ்வாறான அரசாங்கத்திடம் நாட்டின் நலன் கருதிய செயற்பாடுகள் எதனையும் எதிர்பார்க்க முடியாது. எதிர்காலத்திலும் எதிர்கட்சியினர் விடும் பிழைகளையே அவதானித்து வருவதற்கான வாய்ப்பிருக்கின்றது.
அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறு செயற்படாமல் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் என்றால் அதற்கான ஒத்துழைப்புகளை பெற்றுக் கொடுக்க நாங்கள் தயாராகவே உள்ளது ” அவர் கூறினார்.