உயிரிழந்த உளவுத்துறை அதிகாரியின் உடல் ஜாப்ராப்பாத் பகுதியில் உள்ள சாக்கடை ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
உளவுத்துறையில் பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றி வருபவர் அன்கிட் சர்மா. இவர் பெப்ரவரி 24ஆம் திகதி பணி முடிந்து வீடு திரும்பியபோது சந்த்பக் பாலம் அருகே போராட்டக்காரர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இதில் உயிரிழந்த அவரின் உடல் சாக்கடையில் வீசப்பட்டுள்ளது. அன்கிட் சர்மாவை காணாததால் அவரது குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளனர். இதனையடுத்து விசாரணை நடத்தப்பட்டு, அவரின் உடல் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த உளவுத்துறை அதிகாரியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இதேவேளை, தனது மகனை தாக்கியது ஆம்ஆத்மி கட்சி தலைவரின் ஆதரவாளர்கள் என அன்கிட்டின் தந்தை ரவீந்தர் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
இவரும் உளவுத்துறையில் பணியாற்றி வருகிறார். அன்கிட் பலமாக தாக்கப்பட்டு, பின்னர் துப்பாக்கியால் சுடப்பட்டதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.