திருக்கேதீச்சர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாந்தை திருக்கேதீச்சர வீதியில் தற்காலிக அலங்கார வளைவு கேதீச்சரம் சிவத் தொண்டர்களால் இன்று (புதன்கிழமை) காலை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சிவராத்திரி தினத்தன்று மாற்று மதத்தினரால் உடைக்கப்பட்ட குறித்த அலங்கார வளைவு தொடர்பாக மன்னார் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.
இதேவேளை, திருக்கேதீச்சர நிர்வாகம் கடந்த 6ஆம் திகதி, சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஏற்கனவே வளைவு இருந்த இடத்தில் தற்காலிக வளைவு அமைப்பதற்கு நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக அனுமதி கோரியிருந்தனர்.
அதற்கமைவாக மன்னார் மேல் நீதிமன்றத்தால் இன்று 19ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 23ஆம் திகதி வரையான 5 நாட்களுக்கு தற்காலிக வளைவு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைவாக இன்று குறித்த அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.