முன்னெடுப்பதற்காக சிவில் பாதுகாப்புப் படையின் பொறியியல் பிரிவையும் தமது கட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கமையவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள அமைச்சின் காரியாலயத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அண்மையில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, “மலையகத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட தனி வீட்டுத் திட்டங்களில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக பாவனையாளர்கள் எம்மிடம் முறையிடுகின்றனர்.
52 நாட்கள் அரசாங்கத்தின்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் தோட்டப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வுகளில் ஈடுபட்டனர்.
அவர்கள் பயணம் மேற்கொண்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களானவை தரமானவையாக இல்லை என்றும் உரிய கட்டுமான நடைமுறைகளைப் பின்பற்றி நிர்மாணிக்கப்படவில்லை என்றும் ஆய்வுமூலம் உறுதிப்படுத்தி அறிக்கை சமர்ப்பித்தனர்.
எனவே, மலையகத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் இனி முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்கள் தரமானதாகவும் உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி கட்டப்பட்டவையாகவும் இருக்க வேண்டும் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆலோசனை வழங்கினார்.
இந்நிலையில், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமும் சிவில் பாதுகாப்புப் படையணியின் பொறியியல் பிரிவும் இணைந்து பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பது சம்பந்தமான ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று அது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இதன்படி பெருந்தோட்ட மனிதவள நிதியத்திலுள்ள பொறியியலாளர்களும் சிவில் பாதுகாப்புப் படையணியின் பொறியிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களும் இணைந்து ஒரேநேரத்தில் திட்டங்களை முன்னெடுப்பார்கள். இதன்மூலம் தரம் என்பது ஒன்றுக்கு இரண்டு தடவை உறுதிப்படுத்தப்படும்.
இதேவேளை, ஹற்றன் வெஸ்ரன் பிரிவில் மண்வரிசால் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்கள் இருக்கின்றன. அந்தக் குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டம் எமது புதிய அணுகுமுறையின் கீழ் விரைவில் முன்னெடுக்கப்படும்” என்றார்.