உறுதியாக உள்ளோம் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
முதல்கட்ட அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் உறுதியாக இருப்பதாக தலிபான்களின் துணைத் தலைவர் சிராஜுதீன் ஹக்கானி வாக்குறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவின் பிரபல ஊடகமொன்றுக்கு சிராஜுதீன் ஹக்கானி கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை கணிசமாகக் குறைப்பதற்காக அமெரிக்காவும், தலிபான்களும் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தையில், அதற்கான ஒப்பந்தம் நிறைவேறும் தருவாயில் உள்ளது. அந்த ஒப்பந்தத்தை எட்டுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே கட்டார் தலைநகர் டோஹாவில் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆப்கன் விவகாரத்துக்கான அமெரிக்கத் தூதர் ஸல்மே காலிஸாதுடன் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இரு தரப்பினரும் தாக்குதல்களை 7 நாள்களுக்கு கணிசமாக குறைப்பதற்கான ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராகக் கடந்த 19 ஆண்டுகளாக தலிபான்கள் போரிட்டு வருகின்றனர். அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள் போரிட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படைகள் முழுவதுமாக திரும்பப் பெற்ற பிறகே அமைதிப் பேச்சுவார்த்தை தொடரும் எனவும், அமெரிக்காவுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஜனாதிபதி அஷ்ரப் கனி தலைமையிலான அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது எனவும் தலிபான் அமைப்பு தெரிவித்து வருகிறது.
இதற்கிடையில், பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும், மற்றொரு பக்கம் தாக்குதல் நடவடிக்கைகளிலும் தலிபான் ஈடுபட்டு வந்தது. இதைக் குறிப்பிட்டு, தலிபான்களுடன் இனி பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதில்லை என ட்ரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.