LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 8, 2020

தமிழ்நாட்டில் ஆறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்!

தைப்பூசத் திருவிழா இன்று முருகன்
கோயில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் குவிந்துள்ள இலட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகுகள் குத்தியும் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு தைப்பூசம் மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இதையொட்டி முருகன் கோயிலில் விரதம் இருந்து பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் பிரார்த்தனை செய்வது வழக்கம்.

முருகனின் 3ஆம் படை வீடான பழனியிலுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச விழாவையொட்டி காலையில் இருந்தே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து வந்த பக்தர்கள் காவடி ஏந்தியும், அலகுகள் குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்காக 300 சிறப்புப் பேருந்துகள் சேவையில்  ஈடுபட்டுள்ள நிலையில் 3500 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவேளை, முருகப்பெருமானின் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு நெல்லை, ராஜபாளையம், விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாகச் சென்ற வண்ணம் உள்ளனர்.

கோயிலை ஓட்டியுள்ள கடலில் புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், காவடி தூக்கியும், அலகு குத்தியும், அங்கபிரதட்சணம் செய்தும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

முருகனின் 5ஆம் படை வீடான திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோயிலில் காலையில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

சென்னை வடபழனியிலுள்ள முருகன் கோயிலிலும் தைப்பூச விழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அக்கோயிலில் அதிகாலை 4 மணி முதலே குவிந்த பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இதேபோல், பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் காலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயிலில் இன்று காலை தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்டதாக சொல்லப்படும் சென்னிமலை முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா கடந்த 31ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமர்சையாக நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் வலம்வந்த வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் விரதமிருந்து, பாத யாத்திரையாக வந்தும், உடலில் அலகு குத்தியும், பறக்கும் காவடியில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7