நேற்று வியாழக்கிழமை நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன.
பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் இன்று வெள்ளிக்கிழமை 3 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்தன.
இன்று வெள்ளிக்கிழமை காலையிலும் நியூ யோர்க் பங்குச் சந்தை குறைவான புள்ளிகளையே சுட்டிக்காட்டியது.
ஐரோப்பியப் பங்குச் சந்தைகளின் சரிவு ஆசிய வர்த்தகத்தில் வீழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஜப்பானியப் பங்குச் சந்தை 3.7 சதவீதமும், அவுஸ்திரேலியா மற்றும் தென் கொரியாவின் பங்குச் சந்தைகள் 3.3 சதவீதமும் சரிந்தன.
சீனாவில், ஷங்காய் பங்குச் சந்தை 3.7 சதவீதமும், ஹொங் கொங் பங்குச் சந்தை 2.5 சதவீதமும் சரிந்தன.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவுவதால் உலகப் பொருளாதாரத்துக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதைப் பற்றி பொருளாதார வல்லுநர்கள் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் ஐம்பது நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது.
தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் அதிகமான நாடுகளில் பொருளாதார சீர்குலைவுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பொருளாதார மந்தநிலை அபாயங்கள் உள்ளன என்று ஜே.பி. மோர்கன் அசெற் மனேஜ்மென்ற்ரின் (J.P. Morgan Asset Management) ஆசியாவுக்கான பங்குச் சந்தை மூலோபாய நிபுணர் ராய் ஹுய் (Tai Hui) தெரிவித்துள்ளார்.